கொடுத்துச் சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்!: விஜயகாந்த் மறைவு தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு.. அண்ணாமலை இரங்கல்..!!

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்திருக்கிறார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிசம்பர் 28) காலை காலமானார். சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது. தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர். ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர். தன்னலமற்ற தலைவர்.

தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர். கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர். பாரதப் பிரதமர் பேரன்பைப் பெற்றவர். கேப்டன் விஜயகாந்த் அவர்களது மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு.

அவரது இன்னுயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும். கேப்டன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்