உப்பு தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்: விஜயபாஸ்கர் பற்றி பிரேமலதா பேட்டியால் கூட்டணியில் சலசலப்பு

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பிரேமலதா நேற்று அளித்த பேட்டி: வருகிற 24ம் தேதி திருச்சியில் அதிமுக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள எடப்பாடி அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று, அந்த கூட்டத்தில் நானும், தேமுதிக முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொள்ள இருக்கிறோம். அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமையில் போட்டியிடும் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைப்பதுடன், அன்று முதல் பிரசாரம் தொடங்க இருக்கிறோம்.

இன்று அல்லது நாளை 5 தொகுதிக்கான தேமுதிக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். 24ம் தேதி அறிமுக பொதுக்கூட்டத்தில் 5 வேட்பாளர்களும் கலந்து கொள்வார்கள். 25ம் தேதி அதிமுக, தேமுதிக உள்ளிட்ட அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறோம். முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது பற்றி கேட்கிறீர்கள். தமிழகத்தை பொறுத்தவரை அமலாக்கத்துறை உள்ளிட்ட சோதனைகளை தினசரி பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ‘உப்பு தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்’ என்று கேப்டன் அடிக்கடி சொல்வார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நீதிமன்றத்தில் நிரபராதி என்று நிரூபிக்கட்டும். அரசியலில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் வரும். அதை சந்தித்துதான் ஆக வேண்டும்.

தேமுதிகவை பொறுத்தவரை தனித்தே களம் கண்டவர்கள். எத்தனையோ தேர்தலை பார்த்திருக்கிறோம். இன்று மாபெரும் கூட்டணியில் இணைந்துள்ளோம். இது வெற்றி கூட்டணியாக அமையும். அதிமுக – தேமுதிக இரண்டு பேரும் பேசி தான் தொகுதி இறுதி செய்யப்பட்டுள்ளது. கேட்ட தொகுதிகளை அதிமுக எங்களுக்கு தந்துள்ளனர். நல்ல புரிந்துணர்வுடன் இந்த கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் யாரும் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பர்களும் இல்லை. நாங்கள் அனைவருடனும் நட்புணர்வுடன் தான் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

* மாநிலங்களவை பதவி உறுதி
பிரேமலதா கூறுகையில், ‘மாநிலங்களைவ எம்பி பதவி பற்றி கேட்கிறீர்கள். அது உறுதி செய்யப்பட்டு விட்டது. வெற்றிலை, பாக்கு மாற்றி விட்டோம். தேதி மற்றும் யார் வேட்பாளர் என்பது பின்னர் அறிவிக்கப்படும்’ என்றார்.

* தேமுதிக அலுவலகத்துக்கு சென்ற எடப்பாடி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதியம் 12 மணிக்கு சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் சென்றார். அவருடன் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றனர். அவர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த விஜயகாந்த் சமாதியில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பிரேமலதா மற்றும் தேமுதிக நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்திவிட்டு எடப்பாடி புறப்பட்டு சென்றார்.

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது