இப்போதே தொடங்குங்கள்,வெற்றி நிச்சயம்!

வெற்றியாளர்கள் பின்பற்றுகின்ற முக்கியமான உத்தி என்னவென்றால், ஒரு வேலையை உடனே செய்வது. நாமெல்லாம் ஏதாவது ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டே இருப்போம், அவர்கள் உடனே செய்துவிடுவார்கள்.இதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.செய்யலாமா.. வேண்டாமா? என அவர்களும் நம்மைப் போல் பலமுறை யோசிக்கிறார்கள். அதில் எந்த தவறும் கிடையாது. ‘எண்ணித் துணிக கருமம்’ என்றுதான் வள்ளுவரும் சொல்கிறார்.ஆனால் அதைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், அதற்காக நேரம், காலம் ஆள் பலம், பண பலம் என்று எதையும் எதிர்பார்த்து காத்திருக்க தேவையில்லை. அது அமைவதற்கு பல காலங்கள் ஆகலாம். அதற்குள் நாம் போட்டியாளர்கள் நம்மை முந்திச் சென்று விடுவார்கள் என்பதை வெற்றியாளர்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.

அவர்கள் சில விஷயங்களில் தெளிவாக இருக்கிறார்கள். நல்ல நேரம், கெட்ட நேரம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் நல்ல வேலையைச் செய்வது என்று முடிவெடுத்துவிட்டால், எல்லா நேரமும் நல்ல நேரம்தான். வாய்ப்பு தென்படுகிற போது பணியைத் தொடங்கி விடுகிறார்கள். செயலுக்கு ஏற்ப நேரமும், காலமும் அவர்களை பின்தொடர்ந்து வருகிறது.மிகப்பெரிய இலக்குகளை வெற்றியாளர் தொடங்குகிறபோது அவர்களிடத்தில், எதிர்பார்த்த ஆள்பலமும், பணபலமும் இருந்திருக்காது. ஆனால் அதைச் செய்ய வேண்டும் என்று உந்துதலில் தொடங்கிய பிறகு, அதற்கான மனிதர்களும், பணமும், வாய்ப்பும், சூழலும் அவர்களை வந்து சேர்ந்து விடுகிறது.ஆம் நினைப்பதற்கும், செய்வதற்கும் இடையில் இருப்பதுதான் வெற்றி…நீங்கள் நினைத்தீர்கள், அவர் செய்தே விட்டார்… அதனால் அவர் இன்று வெற்றியாளர்!‘‘துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு’என்பது போல ஒன்றைச் செய்வது என்று முடிவெடுத்து விட்டால் பிறகு பின்னோக்கிச் செல்வதில் அர்த்தம் இல்லை.அதனால் தினமும் அது சார்ந்து வெற்றியாளர்கள் பயணிக்கிறார்கள், சின்னச் சின்ன வேலைகளை நாள்தோறும் செய்து கொண்டே இருக்கிறார்கள். இதைத்தான் பாரதி ‘நாளெல்லாம் வீணை செய்’என்று சொல்கிறார்.இதற்கு உதாரணமாய் இந்த சாதனைப் பெண்மணியை சொல்லலாம்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் வீதிகளில் குண்டுகளால் துளைக்கப்பட்ட சுவர்கள், கட்டடங்களைப் பார்க்கலாம். கொடூரமிக்க போரின் முகத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் இந்த சுவர்கள், ஷம்சியாவின் கைவண்ணத்தில் இப்போது அழகான, வண்ணமிக்க ஓவியங்களை சுமந்துநிற்கின்றன.

ஈரானில் பிறந்து வளர்ந்த ஷம்சியா, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தாய்நாட்டுக்கு திரும்பினார். கலை, கலாச்சாரம் மிகுந்த தன் நாடு யுத்தத்தால் உருகுலைந்து போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மோசமான போர்களின் நினைவுகளை மக்கள் மனதில் இருந்து அகற்றுவதற்காக, சுவர்களில் ஓவியங்கள் தீட்ட ஆரம்பித்தார்.தெருக்களில் பெண்கள் ஓவியம் வரைவது எங்கள் நாட்டில் அத்தனை சுலபம் இல்லை. ஆரம்பத்தில் சின்ன சந்துகள், வீட்டுச் சுவர்களில் வரைய ஆரம்பித்தேன். பிறகுதான் கொஞ்சம் தைரியம் வந்து தெருகளில் வரைந்தேன். சுவர்களை ஏன் அழுக்காக்குகிறாய்? என்ற கேள்வியை சிலர் கேட்ட போது அதிர்ந்து போனேன்.வெகு சிலரே என்னை உற்சாகப்படுத்தினார்கள். நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான் என் ஓவியங்கள் மூலம் அமைதியை நிலைநாட்ட விரும்புகிறேன்.2011 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த பயணம் இன்று 3டி ஓவியங்கள் வரை வந்திருக்கிறது என்கிறார் ஷம்சியா.

ஷம்சியாவின் தொலைநோக்கு பார்வையும், தெளிவான சிந்தனைகளும் தைரியமும் அசரவைக்கின்றன. ஷம்சியா ஓவியர் மட்டுமல்ல, ஆசிரியராகவும் இருக்கிறார்.காபூல் பல்கலைக்கழகத்தில்பணியாற்றுகிறார்.ஓவியங்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்.ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கண்காட்சி நடத்துகிறார். போட்டிகளில் கலந்து கொள்கிறார்.ஓவியங்கள் தீட்டி, கூடங்களில் வைப்பதை விட இது போன்ற சுவர் ஓவியங்கள் வரைவதில்தான் தனக்குத் திருப்தி இருக்கிறது என்பவர், அதற்கான காரணத்தையும் சொல்லுகிறார். வெகுசிலர்தான் கேலரிகளில் இருக்கும் ஓவியங்களை ரசிக்க முடியும். அதுவும் ஒருவருக்கு ஓவியத்தில் ஆர்வம் இருந்தால்தான் பார்க்கவே வருவார். ஆனால் என் சுவர் ஓவியத்துக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை. எந்த நேரம் வேண்டுமானாலும், யார் வேண்டு மானாலும் பார்க்கலாம். ஆப்கானிஸ்தான் இப்போது புதிதாக பிறந்திருக்கும் ஒரு குழந்தை. பல விஷயங்களில் ஆப்கானிஸ்தான் நல்ல விதத்தில் மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. போர்களால் சோர்வடைந்த மக்கள் சுதந்திரமான வாழ்க்கை வாழ விரும்புகிறார்கள். ஆப்கானிஸ்தானில் என்னுடைய ஓவியங்கள் நல்ல சிந்தனையை உருவாக்கும்.இந்த நல்ல சிந்தனைகள் தான் இருட்டில் இருக்கும் மக்களை வெளிச்சத்துக்கு வரச் செய்யும் என்று நம்புகிறேன் என்கிறார் ஷம்சியா. ஓவியங்களையே அமைதிக்கான ஆயுதமாக பயன்படுத்தும் ஷம்சியா எதற்கும் யோசிக்காமல் உடனே செயலில் இறங்கினார். தன்னுடைய ஓவியங்கள் மூலமாக தன்னுடைய நாட்டில் உள்ள மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஷம்சியாவின் பணி ஒரு மகத்தான பணி என்பதில் ஐயமில்லை.

 

Related posts

விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பார் கவுன்சில் முன்னாள் நிர்வாகியிடம் விசாரணை

பெரியாரின் 146ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர் மரியாதை