விரும்பியதைச் செய், வெற்றியை வசப்படுத்து!

மாணவர்களைப் படி, படி என்று சொல்லி மதிப்பெண்களைக் குவிக்கும் இயந்திரங்களாக மாற்றிவிடுகிறோம். பெற்றோர்களும் தங்களால் நிறைவேற்றிக் கொள்ள முடியாத கனவுகளை தங்களுடைய பிள்ளைகள் மீது திணிக்கும் செயல்களும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.நான் டாக்டராக ஆசைப்பட்டேன். என்னால்தான் முடியவில்லை, நீயாவது என் கனவை நிறைவேற்று! என்றும், அவனெல்லாம் இன்ஜினியரிங் படிக்கிறான். நீ அவனுக்கு எந்த விதத்திலும் குறைந்தவன் அல்ல, நீயும் படி எனவும் குழந்தைகளை விரட்டியடிக்கும் பெற்றோர்களும் உண்டு. விருப்பமானதைப் படி, அதில் கவனம் செலுத்து சிறப்பாகப் படி என்று சுதந்திரம் கொடுக்கும் பெற்றோர்கள்
குறைவாகத்தான் இருக்கிறார்கள்.உலகில் உள்ள விசித்திரத்தை நாம் ஒருபோதும் உணர்ந்து கொள்ள முயல்வதே இல்லை. அவ்வாறு என்னதான் விசித்திரம் இருக்கிறது இந்த உலகில் என நீங்கள் கேட்பது என் செவிகளில் விழுகிறது. சற்றே எண்ணிப் பாருங்கள். மயில் அழகாக ஆடும், ஆனால் அதற்கு பாடத் தெரியாது. குயில் இனிமையாக பாடும் என்றாலும் அதற்கு ஆடத் தெரியாது. அதுபோல மீன் இன்பமாக நீந்தும். அதற்கு மரம் ஏறத் தெரியாதே.

அதுபோல்தான் ஒரு குழந்தைக்கு இயற்கையாகவே கணிதம் நன்றாக வரும்.ஆங்கிலம் வராது. இன்னும் சிலருக்கு விளையாட்டு என்றால் இரட்டிப்பு ஆர்வம், படிப்பு அதிகம் வராது. ஓவியம் வரைபவருக்கு, விஞ்ஞானம் வராமல் போகலாம். அதாவது, ஒவ்வொரு குழந்தையும் ஒரு தனித்தன்மையுடன் தான் இருக்கும்.ஒரு செடியில் பூக்கின்ற இரண்டு ரோஜாக்களை ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டுப் பேசாதீர்கள் என்கிறார் கவிஞர் கலீல் ஜிப்ரான். மாறுபாடாக இருப்பது வேறுபாடு அல்ல. அதுதான் அழகு. எல்லா விரலும் ஒன்று போல் இல்லை என்று குறைபட்டுக்கொள்கிறோம். ஒருவேளை எல்லா விரலும் ஒரே விதமாக அளவாக இருந்தால் கையே பயனற்றதாக ஆகிவிடாதா? ஆகவே மாறுபாடுகளால் தான் மகத்துவம் நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு இயல்பாக எந்தக் கலை அல்லது பாடம் பிடிக்கிறது என்பதை மனோதத்துவ ரீதியாக கவனித்துப் பாருங்கள். அதில் கவனம் செலுத்துவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து ஊக்கம் அளியுங்கள். உங்களுடைய கனவுகளை திணிப்பதற்கு ஒருபோதும் முயற்சி செய்யாதீர்கள். அவர்களுடைய விருப்பச் சிறகுகளை விரிப்பதற்கு சுதந்திரம் கொடுங்கள்.விருப்பமில்லாத படிப்பை அல்லது விரும்பாத வேலையைச் செய்து விருப்பமின்றி வாழ்ந்து, வேதனையில் மூழ்கி வெம்பிப் போவதைவிட விருப்பமான ஒன்றை தேர்ந்தெடுத்து, அதில் சிறப்பான கவனம் செலுத்தி ஆனந்தமாக வாழ்வதே சிறந்த வாழ்க்கை. இதற்கு உதாரணமாக இந்த சாதனைப் பெண்மணியைச் சொல்லலாம்.
பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும். ஈரானில் மோட்டார் பந்தய வீராங்கனையாகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார் பெனாஸ் ஷஃபி.அவர் ஒரு பெண் என்பதை அறிந்து ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் வாய் பிளக்கிறது மக்கள் கூட்டம்.

பெனாஸ் மோட்டார் பந்தய வீராங் கனையாக மாறிவிட்டதால், ஈரான் பெண்கள் அனைவருக்கும் வாகனங்களை ஓட்டும் அனுமதி கிடைத்திருக்கிறது என்று எடுத்துக்கொள்ள இயலாது.சிறப்பு அனுமதி வாங்கிய பெனாஸ் மோட்டார் பைக்கை ஓட்டி வருகிறார்.அதுவும் மக்கள் புழங்கும் சாலைகளில் அவர் பைக் ஓட்டிச் செல்லக்கூடாது. அவருக்கு என்று விதிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே ஓட்ட முடியும். 2015 வரை பெனாஸ் உட்பட ஆறு பெண்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.அதிலும் பெனாஸ் ஒருவருக்கு மட்டுமே தொழில்முறை அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

33 வயது பெனாஸ், கடந்த 17 ஆண்டுகளாக பைக் ஓட்டிவருகிறார். சின்ன வயதில் இருந்தே பைக் மீது ஒரு கிரேஸ் வந்துவிட்டது. ஆனால் 15 வயது வரை தெருக்களில் பெண்கள் பைக் ஓட்டினதை நான் பார்த்ததே இல்லை. அதற்காக என்னால் பைக் ஓட்ட முடியும் என்று நினைத்ததில்லை. ஒருநாள் ஸான் ஜன் கிராமத்தில் மோட்டார் பைக் ஓட்டிக்கொண்டு ஒரு பெண் கடந்து போனார். நான் ஆச்சரியத்தில் உறைந்து போனேன். உடனே நானும் பைக் வீராங்கனை ஆக வருவேன் என்று முடிவு செய்து கொண்டேன் என்கிறார் பெனாஸ்.மனதில் உறுதி எடுத்துக் கொண்டாலும் எங்கே பயிற்சி எடுத்துக் கொள்வது? சாலைகளில் பைக் ஓட்டக்கூடாது என்ற சட்டம் இருக்கிறது. ஆனாலும் வேறு வழியில்லாமல். இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். பயிற்சியாளர் என்று யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. முறையாக கற்றுக் கொள்ளாததால் பைக் ஓட்டுவதில் உள்ள நுணுக்கங்கள் அவருக்கு எளிதில் கைவரவில்லை. அடிக்கடி பைக்கோடு விழுந்துவிடுவார். இதனால் பல நேரங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுவிடும்.இப்படியே தானாகவே பைக் ஓட்டி பழகி பல தடைகளைத் தாண்டி இன்று ஒரு சிறந்த சர்வதேச பைக் வீராங்கனையாக உருவாகி உள்ளார் பெனாஸ்.

பெனாஸ் செய்திருக்கும் சாதனையை ஈரானைச் சேர்ந்த எந்த ஒரு ஆணும் இதுவரை செய்ததில்லை. சாலைகளிலும் கரடு முரடான பாதைகளிலும் தொழில் முறை பைக் பந்தயக்காரராக விளங்குகிறார் பெனாஸ். பெண் என்ற காரணத்துக்காகச் சிறப்பு சலுகைகளோ, பாராட்டுகளோ தேவையில்லை. ஒரு பெண் இப்படிச் செய்யலாமா என்று விமர்சிப்பவர்களையும் நான் கண்டுகொள்வதில்லை. ஒவ்வொன்றையும் காது கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தால், நம்மால் ஒரு அடி கூட முன்னேற முடியாது.விமர்சிப்பவர்களுக்கு நாம் செயல் மூலம் தான் பதிலளிக்க வேண்டும் என்கிறார் பெனாஸ்.தைரியமான அம்மா, ஆரம்பத்தில் பயிற்சி பெற பைக் கொடுத்து ஊக்குவித்த சகோதரன் ஆகியோரால்தான் பெனாசின் கனவு நிறைவேறியிருக்கிறது. தற்போது தன்னுடைய சம்பாத்தியத்தைச் சேர்த்து வைத்துத்தான் சொந்தமாக ஒரு பைக் வாங்கி உள்ளார் பெனாஸ்.

பெனாஸ் போன்று பலர் தங்கள் லட்சியத்தை அடைய முயற்சி செய்யலாம்.ஈரான் போன்ற நாட்டிலிருந்து கூட ஒரு பெண் முயன்றால் தன் லட்சியத்தை நிறைவேற்ற முடியும் என்பதற்கு பெனாஸ் மிக சிறந்த உதாரணம். அழகையும், மென்மையையும் சொல்லி பெண்களின் திறமைகளை அடக்கி வைக்காமல், அழகையும், மென்மையையும் விட வலிமையும், தைரியமும்தான் பெண்களுக்கான சிறப்பான அடையாளங்களாக இருக்க வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறார் பெனாஸ்.மேலும் விரும்பியதை செய்வதற்கு முழு சுதந்திரம் தந்தால் வெற்றியை வசப்படுத்தி விடலாம் என்பதே இவரின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

 

Related posts

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் வி.சி.க. தலைவர் திருமாவளவன்

சென்னை சிபிஐ அலுவலகத்தில் நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட்டார் பொன்மாணிக்கவேல்

கும்மிடிப்பூண்டி அருகே வழுதலம்பேடு கிராமத்தில் எட்டியம்மன் கோயிலில் வைக்கப்பட்ட சீல் அகற்றம்: பட்டியலின மக்கள் சாமி தரிசனம்