வாகை சூடும் வெற்றியாக மாற்றுங்கள்

வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது.ஆனால் தோல்விக்குப் பயந்து பலர் எப்போதும் முயற்சி செய்வதே இல்லை.அதே சமயம் அவர்கள் இருக்கும் இடத்தில் இருக்கவும் விரும்பமாட்டார்கள், எங்கே நம் பின்தங்கி போய்விடுவோமோ என பயப்படுவார்கள்.கப்பல்கள் பரந்த நீர்ப்பரப்பில் போகும்போது புயலால் ஏற்படும் ஆபத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.ஆனால் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்தால்,அவை துருப்பிடித்து பயனற்றுப் போகும். இதற்காகவா அவை உருவாக்கப்பட்டன.ஒருவர் ஒரு காரியத்தை செய்ய உறுதி பூண்ட பின் அதில் உள்ள ஆபத்தை ஏற்காமல் இருக்க முடியாது.அதை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.வெற்றி பெற்றவர்கள் தடைகளை பாதையாக மாற்றி இலக்கை அடைந்தவர்கள்.வெற்றி பெற்றவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் அவர்களை மேம்படுத்துகின்றன. வெற்றியாளர்கள் தங்களை நல்ல முறையில் தயார் செய்து கொண்டு எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதருமே வெற்றிக்காக போராடுவது உலகில் தன்னை அடையாளப்படுத்துவதற்குத் தானே! அதனால் அதற்கான வெற்றி சிறப்பானதாக இருக்க வேண்டும். வாகை சூடும் வெற்றியாக இருக்க வேண்டும்.இதனைக் கருத்தில் கொண்டு வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முயற்சி செய்யுங்கள்,முயற்சிகளில் ஏற்படும் தோல்விகளை கண்டு விலகி ஓடிவிடாதீர்கள்,தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். அப்படியான முயற்சிகள் மூலம் சாதித்த சாதனை பெண்தான் மித்தாலி ராஜ்.கிரிக்கெட் என்றாலே ஆண்கள் விளையாடும் விளையாட்டு,இதில் பெண்கள் ரசிகர்கள் மட்டுமே பெண்களுக்கும் கிரிக்கெட்டிற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்பவர்கள் மத்தியில் பெண்களும் கிரிக்கெட்டில் சாதிக்கலாம் என்று சாதித்துக் காட்டியவர்தான் மித்தாலி ராஜ்.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தவர்தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்த மித்தாலிராஜ்.சாதனை படைத்த பின் மித்தாலி ராஜ் பேட்டி ஒன்றின் போது உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு,இதே கேள்வியை ஆண் கிரிக்கெட் வீரர்களிடம் போய் உங்களுக்குப் பிடித்த பெண் கிரிக்கெட் விளையாட்டு வீரர் யார் என்று கேட்பீர்களா?என்று கேட்டு அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். பெண்கள் கிரிக்கெட் என்றால் ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுவதில்லை, நாங்களும் பயிற்சி எடுத்து கஷ்டப்பட்டு தான் விளையாடுகிறோம் என்று பதில் அளித்து அனைவரையும் சிந்திக்க வைத்தவர்தான் மித்தாலி ராஜ்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மித்தாலி ராஜ் பிறந்து வளர்ந்தார். தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட மித்தாலி ராஜின் தந்தை துரைராஜ்,விமானப்படை அதிகாரியாகப் பணியாற்றியவர். மித்தாலி சிறுமியாக இருந்தபோது கிரிக்கெட்டில் பெரிய ஆர்வமில்லாதவர்.அவரை ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவருடைய பெற்றோர் கிரிக்கெட்டை தேர்ந்தெடுத்தார்கள்.அதுவே மித்தாலிக்கு பிடித்த விளையாட்டாக மாறிப்போனது, மித்தாலி கிரிக்கெட் பேட்டைப் பிடித்து விளையாடிய போது 10 வயது.இந்திய கிரிக்கெட் அணியில் 16 வயதில் என்ட்ரி கொடுத்தவர் மித்தாலி.அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அணியில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பை நூலிழையில் இழந்தார். இருந்தபோதும் மனம் தளரவில்லை, மீண்டும், மீண்டும் முயற்சி செய்தார், அதன் பலனால்,1999, ஜூன் 26-ஆம் தேதி அன்று தனது முதல் சர்வதேசப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார்.அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் விளாசி தனது என்ட்ரியை பதிவு செய்தார். சிங்கத்தின் என்ட்ரி கர்ஜனையுடன் தான் இருக்கும் என்பது போல இருந்தது அது. அதன் பின்னர் தனது கடைசிப் போட்டி வரை தனது ரன் வேட்டையை தொடர்ந்தார்.

களத்தில் சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி விளையாடும் அற்புதமான வீராங்கனை மித்தாலி ராஜ். பார்ப்பதற்கு அவர் நிதானமாக விளையாடுவதைப் போல் தெரிந்தாலும், ரன் குவிப்பதில் வல்லவர்.மித்தாலி எந்த நிலையில் களமிறங்கினாலும் எதிரணியினருக்கு அச்சம் தரும் வீராங்கனையாகவே விளங்கினார். அதன் காரணமாகவே எதிரணிக்குக் கிலியை ஏற்படுத்தும் வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார்.உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி கண்டது.ஆனால், அந்தப் போட்டியின்போது,ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீராங்கனை என்ற உலக சாதனையை நிகழ்த்தியிருந்தார் இந்திய கேப்டன் மித்தாலி ராஜ். எனினும்,அணியின் தோல்வியின் காரணமாக, தன் இமாலய சாதனையை ஒரு பொருட்டாகவே அவர் கண்டுகொள்ளவில்லை,அதுபற்றி அவரிடம் அப்போது கேட்கப்பட்டபோது, இந்த முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் தோற்றதால் கடும் ஏமாற்றமடைந்துள்ளேன். வென்றிருந்தால் கொண்டாட்டங்கள் இருந்திருக்கலாம். ஆனால், ஆட்டத்தின் முடிவில்,இந்தச் சாதனையை நிகழ்த்திய உணர்வே எனக்கு ஏற்படவில்லை.

என்னைப் பொறுத்தவரையில் இந்தச் சாதனையில் புதிதாக எதுவும் இல்லை.உலகக்கோப்பையில் இந்தச் சாதனை நிகழ்ந்திருப்பதால் அதற்கு முக்கியத்துவம் ஏற்படுகிறது. ஆனால், அணி வெற்றி பெறாத நிலையில், தனிநபர் சாதனைகள், ஆட்டம் எல்லாம் ஒரு பொருட்டல்ல என்றே நான் கருதுகிறேன் என்றார் பெருந்தன்மையுடன் மித்தாலி.மித்தாலியின் சாதனையை சொல்லிக் கொண்டே போகலாம்,சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (7805) அடித்த வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் முறையாக 7 ஆயிரம் ரன்களை கடந்த வீராங்கனை, அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய வீராங்கனை என்ற சாதனையும் மித்தாலி ராஜையே சேரும்.

இதே போன்று மித்தாலி ராஜ், சர்வதேச மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக முறை (64) அரைசதம் அடித்து இருக்கிறார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 7 முறை அரைசதம் விளாசி சாதனை படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீராங்கனை என்ற பெருமையையும் மித்தாலி படைத்திருக்கிறார்இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இரண்டு உலகக் கோப்பை பைனலுக்கு இந்திய அணியை அழைத்து சென்ற ஒரே கேப்டன்,டி20 மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக 2 ஆயிரம் ரன்களை அடித்த வீராங்கனை, 200 ஒருநாள் போட்டியில் விளையாடிய ஒரே வீராங்கனை,மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் போன்ற சாதனையை படைத்த மித்தாலி ராஜ், அர்ஜூனா விருது, பத்ம, ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர். சர்வதேச அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெண்கள் கிரிக்கெட்டையும் விரும்பிப் பார்க்க வைத்த பெருமைக்குரிய சாதனைப் பெண்தான் மித்தாலி ராஜ். மித்தாலியின் பெற்றோர் சிறு வயதிலேயே கிரிக்கெட் விளையாட்டை தேர்ந்தெடுத்து வாய்ப்பை உருவாக்கி தந்தார்கள். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தொடர்ந்து முயற்சி செய்து வாகை சூடும் வெற்றியாக மாற்றிக் கொண்டவர் தான் மித்தாலி.விளையாட்டில் சாதிக்க விரும்பும் பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளார் மித்தாலி.கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து மித்தாலி ஓய்வு பெற்றிருந்தாலும் அவரது சாதனை வாழ்க்கை சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் உன்னத பாடமாகும்.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது