Friday, September 20, 2024
Home » துணிச்சலே உந்துசக்தி

துணிச்சலே உந்துசக்தி

by Porselvi

பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும்,இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்றார் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஐயா அப்துல் கலாம் அவர்கள். இலட்சிய சிகரத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர்களை மட்டுமே வரலாறு தன்னுள் பதிவு செய்து கொண்டாடி மகிழ்கிறது.பிறப்பைப் பதிவு செய்கிறோம், இறப்பைப் பதிவு செய்கிறோம். ஆனால் வாழ்க்கையை பதிவு செய்கிறோமா?வாழ்க்கையைப் பதிவு செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் ஒரு உன்னத இலட்சியம் வேண்டும். இலட்சியத்தை அடைவதற்கு துணிச்சலை மனதில் இடம் பெறச் செய்ய வேண்டும், அதன் பின் உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை ஏற்படும், இதைத்தான் தன்னம்பிக்கை என்கின்றோம். உளி படாத கல்சிலையாவதில்லை. அதுபோலத் துணிச்சல் இல்லாத கனவு நனவாவதில்லை. துணிச்சல்தான் வெற்றிக்கான உந்துசக்தி.

உங்களை நீங்கள் எவ்வளவு தூரம் நம்புகிறீர்களோ அதனைப் பொறுத்து உங்களுடைய செயல்பாடு இருக்கும்.உங்களுடைய செயல்பாடுகள் தான் உங்களுடைய வெற்றியைத் தீர்மானிக்கின்றது. உங்களை நீங்கள் நம்பத் துவங்கும்போது தான் ஒளிபொருந்திய பாதையில் உங்களால் அடி எடுத்து வைக்க முடியும் என்கிறார் எமர்சன்.ஆகவே உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புங்கள். மென்மேலும் வாய்ப்புகளை சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுவதற்கு எந்தெந்த மாதிரியான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும், அவ்வாறு திறமைகளை வளர்ப்பதற்கு நீங்கள் எடுக்க வேண்டிய முயற்சிகள் என்னென்ன என்பதைக் குறித்து சிந்திக்க தொடங்குங்கள். மூளையைக் கசக்கி கொண்டே இருங்கள். தெளிவு பிறக்கும் வழிகளும் தென்படும், அந்த வழியில் துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் கனவை நிஜமாக்கிக் கொள்ளுங்கள். இதற்கு உதாரணமாய் இந்த சாதனைப் பெண்மணியைச் சொல்லலாம்.

சாராவின் சொந்த ஊர் கேரள மாநிலம் கோட்டயம். அவரது தந்தை ஒரு பட்டயக் கணக்காளர். தாய் இல்லத்தரசி. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். மகன் பிரதீக் பிறந்து எட்டு ஆண்டுகளுக்குப்பிறகு, இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. அவர்களில் சாராவும் ஒருவர். மூன்று குழந்தைகளுமே துரதிஷ்டவசமாக மரபணு குறைபாடுகள் காரணமாக செவித்திறனையும் இழந்தார்கள்.மூன்று குழந்தைகளுக்குமே செவித்திறன் இல்லாத நிலையை அறிந்த அவரது பெற்றோர்கள் துயரத்தின் உச்சத்திற்குச் சென்றனர். இருப்பினும் அவரது பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை பெரிதுபடுத்தாமல், அவர்களைத் தன்னம்பிக்கை மிக்கவர்களாக உருவாக்கினார்கள்,இந்த உலகை வெல்ல வேண்டுமென்றால் துணிச்சலுடன் வாழ வேண்டும் என்பதைக் கற்றுத் தந்தார்கள். இரட்டைக் குழந்தைகளில் மரியா அமைதியானவள். சாரா குறும்புக்காரர், பேச முடியாவிட்டாலும் சக குழந்தைகளுடன் தான் சொல்ல விரும்புவது எதுவாக இருந்தாலும் துணிச்சலுடன் சைகை மூலமாகத் தயங்காமல் செய்து காட்டுவார். இதையெல்லாம் பார்த்த அவரது பெற்றோர் எதிர்காலத்தில் இவர் வக்கீலாகத் தான் வருவார் என்று முடிவு செய்தார்கள். பெற்றோரின் ஆசை சாராவின் கனவாக மாறிப்போனது.

எனவே சட்டம் படிக்க வேண்டும் என்று முடிவு செய்தார், ஆனால் காது கேளாத, உன்னால் எப்படி சட்டம் படித்து வழக்கறிஞராக வாதாட முடியும் என்று கேட்டு நண்பர்களும் உறவினர்களும் சிரித்தார்கள். சாரா மனம் தளரவில்லை, சட்டம் படிக்க வேண்டும் என்ற தன்னுடைய முடிவில் இருந்து பின் வாங்கவில்லை. இந்த நிலையில் பெற்றோரின் பணி காரணமாக குடும்பமே பெங்களூருக்குக் குடியேறினார்கள்.சட்டப் படிப்புக்கு முன், சாரா ஜோதி நிவாஸ் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை (பிகாம்) முடித்தார். அவர் வணிக சட்டம், கணக்கியல் மற்றும் கணினி அறிவியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி படித்தார். அதன்பின் சட்டம் படித்து வக்கீலாகப் பணியாற்ற வேண்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தார். அவர் செயின்ட் ஜோசப் சட்டக் கல்லூரியில் தனது இளங்கலை சட்ட படிப்பை (LLB) படித்தார்.தனது சட்ட அறிவை அடிப்படையாகக்கொண்டு அனுபவத்தை வளர்த்துக் கொள்ள முடிவு செய்தார். பெங்களூரில் உள்ள சட்டம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையம் மற்றும் லக்ஷ்மிகுமாரன் – தரன் போன்ற வழக்கறிஞர்களிடம் பல்வேறு பயிற்சி அனுபவங்களை பெற்று சட்ட உலகில் சாதிக்க தன்னை மெருகேற்றிக்கொண்டார். அதன் பின் பெங்களூரு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தன் பெயரை பதிவு செய்து கொண்டார் சாரா.

கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் நிசப்தம். நீதிமன்றமே ஸ்தம்பித்துவிட்டது போன்றதொரு அமைதி.இத்தனைக்கும் அன்று முக்கியமான ஓர் வழக்கை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார் தலைமை நீதிபதி சந்திரசூட். அவருக்கு மட்டுமல்ல. அதே அமர்விலிருந்த மற்றொரு நீதிபதிக்கும், அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கும், இதர வழக்கறிஞர்களுக்கும் அன்றைய வழக்கு ஒரு புது அனுபவம். காரணம், பெண் வழக்கறிஞர் சாரா சன்னி காணொலி வாயிலாக சைகை மொழியில் வாதிட்டுக் கொண்டிருந்தார். மொழிபெயர்பாளரின் உதவியுடன் சாரா தைரியமாக சைகை மூலமாக வாதாடிக் கொண்டிருந்தார். மேலும் இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சாராவை வெகுவாகப் பாராட்டினார். இது வரவேற்கத்தக்க நிகழ்வு என்றும் புகழாரம் சூட்டினார். மொழிபெயர்ப்பாளர் சஞ்சிதா ஐன் சாரா குறித்து கூறியதாவது, சாரா ஒரு திறமையான பெண். அவள் தனது கனவுகளை நிஜமாக்கி உள்ளார். என்னால் முடிந்த வழிகளில் நான் அவருக்கு உதவுகிறேன் என்றார்.

சாரா சன்னி என்ற சாதனை பெண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஆஜராகி வரலாறு படைத்துள்ளார். அவரது கனவு நிஜமானது மட்டுமல்லாமல் அவரைப் போன்ற பலருக்கு இது உத்வேகம் அளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் முதன்முதலாக சைகை மொழியில் வாதாடுவதற்கு அனுமதி அளித்துள்ளது என்பது சாராவின் துணிச்சலான முயற்சியால் தான். மேலும் இவருடைய வாழ்க்கை சாதிக்கத் துடிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாகவும் ஊக்கமளிப்பதாகவும் உள்ளது என்பதில் ஐயமில்லை.

You may also like

Leave a Comment

fifteen + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi