தெளிவான சிந்தனை, தீர்க்கமான வெற்றி..

ஒரு ஆசிரியர்,சிறந்த அறிவாளி என்றும் போற்றப்பட்டவர்.அவருக்கு பூர்வீக சொத்து ஒன்று மலைப்பகுதியில் இருந்தது. ஒரு சமயம் அந்த சொத்துக்களை பார்வையிட சென்றார். அங்கே மரங்களும்,செடி,கொடிகளும் அடர்த்தியாக வளர்ந்து,காடு போல் இருப்பதை கவனித்தார்.பல ஏக்கர் நிலமும் பெரிய காடாக அவருக்கு தோன்றியது. அந்தக் காட்டை பராமரிப்பது கடினம் என்று மனதுக்குள்ளே எண்ணிக் கொண்டே திரும்பிவிட்டார். நாட்கள் நகர்ந்தன, தனது ஆசிரியர் பணி, புத்தகங்கள் எழுதுவது என்று பல மாதங்கள் அவர் வேலையில் மூழ்கி விட்டார். இடையில் மிகப்பெரிய புயலும்,மழையும் அவரது பகுதியில் வந்து போயின.புயலுக்குப் பின்பு தனது மலை நிலம் எப்படி உள்ளது? என்று பார்க்கச் சென்றார் ஆசிரியர், இப்போது அவரது காட்டில் பல மரங்கள் விழுந்தும், செடிகள் பல புதர் போல மண்டியும் காணப்பட்டன. என்ன செய்யலாம்? என்று கேள்வியோடு வருத்தமுடன் அங்கிருந்த ஓய்வு இல்லத்தில் தங்கி இருந்தார்.

அப்போது அந்தப் பக்கமாக ஒரு விவசாயி சைக்கிளில் வந்தார். அந்த காட்டில் மரக்கிளைகளை சேகரித்து எடுத்துக் கொண்டிருந்தார்.ஆசிரியர் அந்த விவசாயிடம் இந்த காடுகளை விற்கலாம் என்று நினைக்கிறேன், வாங்குவதற்கு உங்கள் ஊரில் ஆட்கள் இருக்கிறார்களா? என்று கேட்டார். விவசாயி, ஆசிரியரிடம் ஐயா விலை என்ன என்று சொல்லுங்கள், முடிந்தால் நானே வாங்கிக் கொள்வேன்.இந்த மலையின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் எனக்கு இந்தக் காடுகள் ரொம்ப பிடிக்கும் என்றார். அதற்கு ஆசிரியர் ஒரு ஏக்கர் 100 டாலர் என்று சொல்லி தனது பல ஏக்கர் நிலத்தை அந்த விவசாயிடம் விற்று விட்டார்.

காட்டு நிலத்தை வாங்கிய விவசாயி அங்கிருந்த காட்டின் சருகுகளை நீக்கினார். ஓடிந்த மரங்களிலிருந்து பலகைகளை எடுத்து மர வீடு ஒன்றை அழகாக அமைத்தார். அந்த வீட்டில் தன் குடும்பத்தோடு தங்கினார். தனது காட்டில் இருந்த மிக அடர்ந்த மரங்களை வெட்டி ஒரு அழகான 20 அறைகள் கொண்ட ஒரு மர வீட்டினை உருவாக்கினார்.அந்த அறைகளை தங்கும்விடுதியாக மாற்றிவிட்டார். விடுமுறை நாட்களில் மக்கள் அங்கு வந்து தங்கி இளைப்பாறவும்,அதை காட்டின் குளுமையை ரசிக்கவும்,ஒரு கோடை வாசஸ்தலம் போல அதை அமைத்துக் கொடுத்தார்.வருமானமும் அதிகரித்தது,அடுத்த சில மாதங்களில் அந்த இடம் பலரையும் கவர்ந்த ஒரு சுற்றுலாத் தளமாக மாறிப்போனது.

விவசாயி படிப்பறிவு இல்லாதவர்.ஆனால், வாழ்க்கையை எப்படியாவது வெற்றிகரமாக கொண்டு செல்ல வேண்டும் என்று தெளிவு கொண்டவராக இங்கு திகழ்கிறார். ஆசிரியருக்கு காட்டை நிர்வகிப்பது ஒரு கடினமான வேலையாகப்பட்டது,அதே சமயம்,அந்த காட்டை ஒரு சுற்றுலாத்தளமாக மாற்றலாம் என்ற பார்வை அவருக்கு தோன்றவில்லை. ஆனால் விவசாயி அழகான சுற்றுலா தளமாக மாற்றிவிட்டார். இந்த சம்பவம் உண்மையில் அமெரிக்காவில் நடந்தது.மேற்கண்ட சம்பவம் ஒரு உண்மையை நமக்கு உணர்த்துகிறது.நாம் எவ்வளவு படித்திருக்கின்றோம் என்பதை விட,எப்படி ஒரு பிரச்சனையை அணுகி வெற்றி பெறுகிறோம் என்பதில் தான் உண்மையான அறிவு வெளிப்படுகின்றது. சாதாரண விவசாயி அந்தக் காட்டை கண்ட போது ஒரு கனவு மாளிகையாகக் கொண்டு வரலாம் என்று தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டு சாதித்து தீர்க்கமான வெற்றியை பெற்றுள்ளார்.

எத்தனையோ பிரச்னைகள் ஏற்பட்டாலும் பிரச்னைகளை எதிர் கொண்டு முகம் கொடுத்து தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டால் சாதிக்கலாம் என்பதே இந்த விவசாயின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. இப்படித்தான் பீகாரை சேர்ந்த ருச்சி வர்மா தெளிவான சிந்தனையுடன் இளம் தொழில் முனைவோராக சாதித்து வருகிறார்.ருச்சி வர்மா பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.பள்ளி பயிலும் காலத்தில் இருந்தே ருச்சி வர்மாவிற்கு ஓவியம் வரைவதில் இருந்த ஆர்வம்,வளர்ந்த பிறகு ஃபேஷன் டிசைனிங் துறை மீது திரும்பியது.பள்ளி படிப்பை சிறப்பாக படித்து கல்லூரி படிப்பை மும்பையின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் (NIFT) இந்திய ஆடை வடிவமைப்பு படிப்பை தேர்ந்தெடுத்து படித்தார்.

என்ஐஎஃப்டி-யில் படித்து முடித்த கையோடு ருச்சி வர்மாவிற்கு பார்பி பொம்மைகளுக்கு ஆடைகளை வடிவமைக்கும் வேலை கிடைத்தது.அதன் பின்னர் இந்தியாவிலேயே பிரபலமான ஆடை வடிவமைப்பு நிறுவனமான வெஸ்ட்சைடில் (Westside) இளம்பெண்களுக்கான ஆடை வடிவமைப்பாளராக பணியில் சேர்ந்தார்.இடையில் அவரது கணவருக்கு பணியிட மாற்றம் கிடைத்ததால் மும்பையில் இருந்து டெல்லி செல்ல வேண்டியதாயிற்று.இதனால் ருச்சி வர்மா தனது வேலையை விட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

டெல்லிக்கு குடிபெயர்ந்த ருச்சி வர்மா,வீட்டில் இருந்தபடியே தனது ஆடை வடிவமைப்பு பணியை தொடர முடிவெடுத்தார்.அந்த யோசனை மூலமாகவே 2020 ஆம் ஆண்டு “அருவி ருச்சி வர்மா” என்ற தனது புதிய பிராண்ட்டை உருவாக்கினார்.ஆரம்பத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய முடியாததால் தான் வேலை பார்த்து சேர்த்து வைத்த 2.5 லட்சம் ரூபாயை முதலீடு செய்து தனது ஸ்டார்ட் அப் பயணத்தை தொடங்கினார்.முதற்கட்டமாக 15 வகையான ஆடைகளை சந்தையில் அறிமுகப்படுத்தினார்.பின்னர் ருச்சி வர்மாவிற்கு,மகப்பேறு காலத்தில் பெண்கள் அணிய பிரத்யேக ஆடைகளை தயாரிக்கும் பிராண்ட்கள் இந்தியாவில் அதிகம் இல்லாததை கவனித்தார். உடனே தனது கவனத்தை மகப்பேறு ஃபேஷன் டிசைனிங் மீது திருப்பிய ருச்சி வர்மா,கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு ஆடைகள் வடிவமைக்க ஆரம்பித்தார்.

தனது ஆடைகளுக்கு வரவேற்பு கிடைக்க ஆரம்பித்த நிலையில்,டெல்லியில் மகப்பேறு ஆடைகளுக்கான பிரத்யேக கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளார்.ஆனால்,அந்த சமயத்தில் தான் கொரோனா தொற்று கோரத் தாண்டவம் ஆடியதால் வேறு வழியின்றி வீட்டில் இருந்த படியே ஆன் லைன் ஸ்டோரை ஆரம்பித்தார்.15 விதமான ஆடைகளுடன் ஆரம்பித்து படிப்படியாக 50 விதமான ஆடைகளை அறிமுகப்படுத்திய ருச்சி பிரபலமான பல்வேறு தளங்களில் ஆன்லைன் மூலமாக விற்கத் தொடங்கினார்.ஆரம்பத்தில் வியாபாரம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் சில ஃபேஷன் டிசைனிங் நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸ் முறையில் வீட்டில் இருந்தபடியே டிசைனிங் செய்து கொடுத்து வந்துள்ளார்.அவரது டிசைனிங் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

கடந்த ஆண்டு தனக்கான சொந்த இணையதளத்தை தொடங்கிய ருச்சி,மகப்பேறு உடைகளுக்கு அடுத்தபடியாக இளம்பெண்களுக்கான உடைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.கொஞ்சம்,கொஞ்சமாக வியாபாரமும் நன்றாக சூடுபிடிக்க ஆரம்பித்தது.2021-22 நிதியாண்டில் அருவியின் முதல் வருமானம் 1.8 கோடி ரூபாய் ஆகும்.இந்த ஆண்டு ரூ.5 கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒரு காலத்தில் டாடா வெஸ்ட் சைட், ஸ்பென்சர்ஸ் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்தவர், இப்போது தனது திறமையாலும் உத்திகளாலும் குறிப்பிடத்தக்க ஏற்றம் கண்டு மிகச் சிறந்த இளம் தொழில் முனைவோராக உருவாகி சாதித்து வருகிறார்.தெளிவான சிந்தனையுடன்,இலக்கை நோக்கி தொடர்ந்து நகர்ந்தால் இவரைப் போலவே நமது வாழ்க்கையும் தீர்க்கமான வெற்றி வாழ்க்கையாகவே அமையும். 

Related posts

அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

தெலுங்கானாவில் மேடை சரிந்து கீழே விழுந்த நடிகை.. லேசான காயத்துடன் உயிர் தப்பினேன்: பிரியங்கா மோகன் பதிவு!!

பதிவுத்துறையில் செப்டம்பர் மாதம் வரை ரூ.1, 121 கோடி கூடுதல் வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்