2021ல் வெற்றி பெற்றதைப் போல் நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்: அமைச்சர் உதயநிதி பேச்சு

சென்னை: 2021 தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறுவோம் என்று ராயபுரம் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் இளைய அருணா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, மூத்த முன்னோடிகள் 500 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கினார். அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 500 பேருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கினார். பின்னர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ‘‘திமுக முன்னோடிகளுக்கு கலைஞர் அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவிக்கு ரூ.5 கோடியே 50 லட்சம் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு நாம் வெற்றி பெற்றதைப் போல் 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறுவோம். மூத்த முன்னோடிகள் இளைஞர்களை வழி நடத்துங்கள்’’ என்றார்.

அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, ‘‘சென்னை திமுகவின் கோட்டை. இந்த கோட்டையை இழந்த பின்னரும் அதை மீட்டதற்கு காரணம் முதல்வர் ஸ்டாலின் தான். மணிப்பூரில் பெண்களை புறக்கணிக்க கூடிய ஆபத்தான ஆட்சி நடக்கிறது. ஆனால் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டமானது தொடங்கியுள்ள இந்த நாள் தமிழகத்தின் பொன் நாள்’’ என்றார். முன்னதாக ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, இளைஞர் அணி வளர்ச்சி நிதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ரூ.5 லட்சம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், கே.பி.சங்கர், பகுதிச் செயலாளர்கள் சுரேஷ், செந்தில்குமார், லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது: காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இரங்கல்

விளைநிலங்களில் யானைகள் புகுவதை தடுக்க வனப்பகுதியில் மூங்கில் வளர்க்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை

ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்