சிந்தித்ததை செயல்படுத்துங்கள், வெற்றியை வசப்படுத்துங்கள்!

தண்ணீருக்குள்ளே போட்ட உடனேயே மீன் குஞ்சுகள் நீந்தத்தொடங்கி விடுகின்றன. அவை அதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதில்லை.மனிதன் மட்டும் தான் எல்லாவற்றுக்கும் யோசித்துக் கொண்டிருக்கிறான். யோசிப்பது தவறல்ல, யோசிக்கத்தான் வேண்டும். ஆனால் முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்த பிறகும்யோசிப்பதென்பது முட்டாள்தனமானது. தோல்வித் தரக்கூடியது. நம்முடைய முடிவு தவறாக அமைந்தவிடுமோ என்ற பயம் விரைந்து முடிவெடுப்பதைத் தடுக்கலாம். ஆனால் வெற்றி பெற விரும்புவர்கள் மதில்மேல் பூனையாக உட்காருவதே இல்லை.ஹென்றிஃபோர்டு ஒரு முடிவை ரொம்ப விரைவாக எடுப்பார். எடுத்த பிறகு யார் சொல்வதற்காகவும் அதை மாற்றிக் கொள்ள மாட்டாராம். மாடல் டி என்ற காரை அவர் வடிவமைத்தார். அந்த மாடலை மாற்றச் சொல்லியும் நிபுணர்களும், கார் வாங்குபவர்களுமாக பலர் சொல்லியும் அவர் கேட்கவில்லை.இவ்வளவுக்கும் அந்த மாடல்- டி கார் பார்க்க சுமாரான ஒரு கார்.ஆனால் அதுதான் கோடி கோடியாக விற்றுத் திர்ந்தது.அப்படி சிந்தித்ததை செயல்படுத்தி, வெற்றியை வசப்படுத்திய சாதனை மங்கை தான் பூஜா.

சிறு வயதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட அனுபவத்தை அத்தனை எளிதில் நம்மால் மறந்துவிடமுடியாது.நமக்குக் கற்றுக்கொடுத்தவர்கள் கூடவே வருகிறார்கள் என்கிற நம்பிக்கையில் துணிந்து தனியாக பெடலை மிதித்த நாட்கள் என்றும் பசுமையாக நம் நினைவில் தங்கிவிடுவதுண்டு.கற்றுக்கொடுத்தவர்கள் மாறலாம், சைக்கிளின் அளவு, நிறம் போன்றவை மாறலாம், ஆனால் ஓட்டிய போது ஏற்பட்ட நினைவுகள் எப்போதும் நம்மை விட்டு நீங்காது என்பது தான் உண்மை.எப்போதோ சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த நாட்களை நினைவுகூர்ந்து மகிழ்வோர் மத்தியில், இனி வரும் நாட்களில் மக்கள் தினமும் சைக்கிள் ஓட்டுவதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என்கிறார் பூஜா விஜய்.இவர் ‘பிங்க் பெடல்ஸ்’ (Pink Pedals) என்ற நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.

இன்றைய பரபரப்பான உலகில் சைக்கிள் ஓட்டுவது இயற்கையான சூழலில் நமக்கான நேரத்தை செலவிட உதவும்.அதுமட்டுமில்லாமல் போக்குவரத்து நெரிசல் காரணமாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இதுகுறித்து சிந்தித்தபோது பிறந்தது தான் ‘பிங்க் பெடல்ஸ்’ யோசனை. என்கிறார் பூஜா.2017-ம் ஆண்டு இந்நிறுவனத்தைத் தொடங்கினார். பிங்க் சிட்டி என்றழைக்கப்படும் ஜெய்ப்பூர் என்னுடைய ஊர் என்பதால் இந்தப் பெயரைத் தேர்வு செய்தேன் என்கிறார் பூஜா. பெண் தொழில்முனைவோர்களுக்கு ஊக்கம் அளிக்கும் Her-Now தற்போது பிங்க் பெடல்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது. பூஜா ஒரு வழக்கறிஞராக இருந்த போதும் தொழில் முனைவராக சாதிக்க வேண்டும் என்ற இலக்கில் உறுதியாக இருந்தார். ஆரம்பத்தில் 10 சைக்கிள்களை வாங்கி வாடகை முறையில் தேவைப்படுவோருக்குக் கொடுத்து வந்தார். சிறியளவில் தொடங்கப்பட்டாலும் மெல்ல விரிவடைந்தது. விரைவில் பயனாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

வழக்கறிஞராக மட்டுமல்லாமல் சிறந்த இல்லத்தரசியாகவும் இருந்து கொண்டு, தொழில் முனைவோர் ஆகவும் இருந்து வெவ்வேறு பொறுப்புகளையும் திறம்பட சமாளித்து சாதித்து வருகிறார் பூஜா.உலகின் அதிக மாசு நிறைந்த நகரமாக டெல்லி உள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க உதவும் வகையில் பலர் சைக்கிள் ஓட்ட ஊக்குவிக்கவேண்டும் என்று விரும்பினேன் என்கிறார் சமூக அக்கறையாளராக திகழும் பூஜா.பிங்க் பெடல்ஸ் ஜெய்ப்பூரில் சைக்கிளை வாடகைக்கு கொடுக்கும் முறையைஅறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் போன்ற இடங்களுக்கு வாடகை முறையில் சைக்கிளைக் கொடுக்கத் தொடங்கியது. இதனால் இன்று பலர் சைக்கிள் ஓட்ட ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.

பலர் சைக்கிள் ஓட்ட முன்வரவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார் பூஜா. மேலும் சைக்கிளில் செல்பவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில், சைக்கிள் டூர் ஏற்பாடு செய்தும் வருகிறார். சைக்கிளில் செல்ல நினைக்கும் தூரத்தைப் பொருத்து கட்டணம் நிர்ணயிக்கப்படும். கிலோமீட்டர் அதிகரிக்கும்போது கட்டணம் குறையும் என்ற புதுமையான திட்டங்களை அறிமுகப் படுத்தி வெற்றிகரமாக தனது நிறுவனத்தை நடத்தி வருகிறார்.ஜெய்ப்பூர் சுற்றுலாதளம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், இவர்களில் பலர் பூஜா பெடல்ஸ் நிறுவனத்தின் சைக்கிள் மூலமாக தற்போது சைக்கிளில் நகரைச் சுற்றி வரும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

பூஜா வழக்கறிஞர் பணியில் கவனம் செலுத்தாமல் சைக்கிளை வாடகைக்கு விடும் தொழிலை தேர்வு செய்திருப்பதற்கு பலர் பலவிதமான எதிர்மறைக் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இருந்தபோதும்,இந்த மனநிலையில் இருந்து தன்னை மாற்றி கொண்டு தொழில் முனைவோராக வேண்டும் என்ற இலக்கை தீர்மானித்தார் பூஜா.நீங்கள் மாற்றத்தை கொண்டு சேர்க்க விரும்பினால், முதலில் நீங்கள் மாறவேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் உங்களைப் பின் தொடர்ந்து வருவார்கள் என்கிறார் பூஜா. உயர்தர கியர் சைக்கிள்கள், முதியோர்களுக்கான சைக்கிள்கள் என பல விதமான சைக்கிள்களை இருப்பு வைத்துள்ளார். இந்த சைக்கிள்களுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறது பிங்க் பெடல்ஸ் நிறுவனம்.உங்களிடம் ஒரு யோசனையும் அதில் ஈடுபடுவதற்கான ஆர்வமும் இருக்குமானால் துணிந்து களமிறங்குங்கள். வரக்கூடிய சவால்களுக்கான தீர்வு தானாகவே பிறக்கும் என்பது தான் சாதித்து கொண்டு இருக்கும் இளம் தொழில் முனைவோரான பூஜாவின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. எனவே இப்போதே சிந்தித்ததை செயல்படுத்துங்கள். வெற்றியை வசப்படுத்துங்கள்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு