பாதிக்கப்பட்ட இளம்பெண்களிடம் ரகசிய வாக்குமூலம்: குமரி பாதிரியார் மீதான 2 புகார்களிலும் தனித்தனி குற்றப்பத்திரிகை; சைபர் க்ரைம் போலீஸ் முடிவு

நாகர்கோவில்: குமரி பாதிரியார் மீதான 2 புகார்களிலும் தனித்தனி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. முதல் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீசார் கூறி உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் குடயால்விளையை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29) மீது சாட்டிங் மூலம் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்து வந்த பெனடிக்ட் ஆன்றோ, கடந்த மாதம் 19ம் தேதி கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஒரு நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது குலசேகரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி புகார் அளித்தார். அதில் கடந்த 2022 ல், பாதிரியாருடன் பழக்கம் ஏற்பட்டது. சாதாரணமாக பேசி வந்த என்னிடம் சாட்டிங் செய்து பாதிரியார் தொல்லை கொடுத்தார். அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் நான் விலகிய பின்னரும், தொடர்ந்து சாட்டிங் செய்து தொல்லை செய்தார் என கூறியிருந்தார். சைபர் க்ரைம் போலீசார், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் 2வது வழக்கு தொடர்பாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிடம் விசாரணை நடத்த போலீசார் அனுமதி கேட்டு நாகர்கோவில் ஜேஎம்2 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து நேற்று பாளையங்கோட்டை சிறைச்சாலையில் இருந்து நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு பென்டிக்ட் ஆன்றோ அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்த ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலுக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனையடுத்து அவரை சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். ஏடிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் விசாரணை நடந்தது. குலசேகரம் மாணவியின் புகார் குறித்து கேட்டனர். அப்போது பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, ஏற்கனவே தெரிவித்த கருத்துக்களைதான் தெரிவித்தார். யாரையும் நான் மிரட்டவில்லை. நட்பின் அடிப்படையில் சாட்டிங் செய்தேன். சிலர் என்னிடம் சாட்டிங் செய்வதை நிறுத்துமாறு கூறினர். அவர்களுடன் எந்த வித தொடர்பும் வைத்ததில்லை என கூறி உள்ளார். அவரிடம் வாக்குமூலம் பெற்று போலீசார் பதிவு செய்துள்ளனர்.

2 வழக்குகளுக்கும் தனித்தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே நர்சிங் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டு இருந்த வழக்கிற்கு, குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வழக்கில், சாட்சியங்களை போலீசார் திரட்டி வருகிறார்கள். நர்சிங் மாணவியிடமும் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். சில பதிவுகளும் ஆதாரமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ஒருநாள் போலீஸ் காவல் முடிந்து, இன்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் பாதிரியார் பாளை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.

Related posts

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு