சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியானது. இதில், 31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கு, கடந்த மாதம் 12 தேதி முதல் 30ம் தேதி வரை இணையதளம் மூலமாக 22,535 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

அதில் 18,752 விண்ணப்பங்கன கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பிற்கும் (பிவிஎஸ்சி, ஏஎச்), 3,783 விண்ணப்பங்கன, இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (பி டெக் – உணவுத் தொழில்நுட்பம் / கோழியின தொழில்நுட்பம் / பால்வளத் தொழில்நுட்பம்) பாடப்பிரிவிற்கும் பெறப்பட்டன. இந்த நிலையில் 2023-24ம் கல்வியாண்டிற்கான தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் நேற்று காலை 10 மணிக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பில் (கலையியல் பிரிவு) 31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதில் அரியலூர் மாணவர் ராகுல் காந்த், தர்மபுரி கனிமொழி, தென்காசி முத்துலட்சுமி, அரியலூர் நந்தினி , திருப்பத்தூர் கிரேஸ் கிரிஷ்டி, தர்மபுரி விஷ்வா, அரியலூர் வசந்தி, நாமக்கல் லோபாஷினி அரியலூர் சக்தி குமரன், கரூர் கவுசிகா ஆகிய 10 மாணவர்கள் தரவரிசைப் பட்டியலில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான (பி டெக்) தரவரிசைப் பட்டியலில் அரியலூர் விஷ்ணுபிரகாஷ் 199.5 க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், திருவண்ணாமலை மாணவி தர்ஷா 198.5 இரண்டாம் இடத்தையும், கள்ளக்குறிச்சி வர்ணஓவியா 198 மற்றும் கடலூர் லோகேஷ் குமார் 198 மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான (7.5 சதவீதம்) முன்னுரிமை இடஒதுக்கீட்டு பிரிவின்கீழ், சேலம் விக்னேஷ் மற்றும் பெரம்பலூர் அஜய் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப்பட்டியலில் முதல் இடங்களை பெற்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து திருவண்ணாமலை பானுபிரியா 199.5 மற்றும் மதுரை நித்யா 199.5 பெற்று இரண்டாம் இடத்தையும் மதுரை தாமரை செல்வி 198.5 மற்றும் பெரம்பலூர் சிவா 198.5 மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடங்களை பெற்றுள்ளனர். இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் இளநிலை தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். தற்காலிக தரவரிசை பட்டியல் பற்றி ஏதேனும் விசாரணை இருப்பின் தொலைபேசி எண். 044 – 2999 4348 / 2999 4349 அழைக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சென்னை கிண்டியில் ரூ.30 கோடியில் சிறுவர் இயற்கை பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.51,600க்கு விற்பனை..!!

தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!