அனுபவமிக்கவர்கள் சட்டம் -ஒழுங்குக்கு மாற்றம் விருப்ப மற்ற இடமாறுதலால் போக்குவரத்து போலீசார் திணறல்: நடைமுறையை மாற்ற கோரிக்கை

தண்டையார்பேட்டை: போக்குவரத்து காவல் துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் திடீரென சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு மாற்றப்படுவதால் திணறி வருகின்றனர். ேமலும், இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவது வழக்கம். அனுபவம் வாய்ந்த போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டால் அவர்கள் எளிதில் நெரிசலை சரி செய்து விடுவார்கள். போக்குவரத்து துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்தவர்கள் திடீரென சட்டம்- ஒழுங்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுகிறார்கள்.

இதனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்து துறையில் பணியில் இருந்துவிட்டு, தற்போது 45 வயதை கடந்த பிறகு அவர்களை சட்டம்- ஒழுங்கிற்கு மாற்றப்படுவதால் அவர்கள் அங்கு சென்று வேலைகளை தெரிந்து கொள்வதற்குள் ஓய்வு பெற்று விடுகின்றனர். மேலும் போக்குவரத்து காவல்துறையில் புதுப்புது காவலர்களை‌ நியமிக்கிறார்கள். அனுபவம் வாய்ந்தவர்களை பணி மாறுதலில் அனுப்பி வைத்த பின், புதிதாக வருபவர்கள் போக்குவரத்து நெரிசலை எப்படி கையாள்வது என்பது தெரியாமல் திணறும் நிலை ஏற்படுகிறது. சென்னையில் தங்க சாலை, ராயபுரம், மண்ணடி, பிராட்வே, பூக்கடை, பாரிமுனை, வியாசர்பாடி, பெரம்பூர், கொடுங்கையூர், எம்கேபி நகர், திருவொற்றியூர் போன்ற இடங்களில் போக்குவரத்து பாதிப்பு அதிகமுள்ளது.

இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். தற்போது 45 வயதை கடந்தவர்கள் சட்டம்-ஒழுங்கிற்கு மாற்றப்படுவதால் அங்கு அவர்களுக்கு எப்படி வழக்கை கையாள்வது, குற்றவாளிகளை எப்படி அடையாளம் காண்பது, சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது போன்ற விஷயங்கள் பெரிதாக தெரிவதில்லை.

அவர்கள் வேலையை கற்றுக்கொள்வதற்குள் ஓய்வுபெறும் நிலை உள்ளது. இதனை காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்தில் கொண்டு பணி மாறுதல் செய்வதற்கு முன்பு விருப்பம் உள்ளவர்கள் யார் என்று கேட்டுவிட்டு, அவர்களுக்கு பணி மாறுதலை செய்யலாம். ஆனால் விருப்பமற்ற பணி மாறுதல் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக போக்குவரத்து காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி