வேங்கைவயல் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி நீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் : மே 6ல் ஒரு நபர் ஆணையம் விசாரணை!!

புதுக்கோட்டை : வேங்கைவயல் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி நீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட
விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட ஒரு நபர் ஆணையம் வரும் 6ம் தேதி விசாரணையை தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இரு தினங்களுக்கு முன் 11 பேருக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை செய்ய வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த வழக்கில் 119 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் 90 நாட்கள் ஆகியும் ஒருவர் கூட கைது செய்யப்படாததால் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஒரு நபர் ஆணைய நீதிபதி வரும் 6ம் தேதி புதுக்கோட்டைக்கு விசாரணைக்காக வருகிறார். ஏற்கனவே சட்டமன்றத்தில் ஒரு நபர் ஆணையத்திற்கு அரசு எல்லா வித உதவியும் செய்யும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்

மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்!