வெம்பக்கோட்டை அகழாய்வில் பெண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுப்பு

ஏழாயிரம்பண்ணை : வெம்பக்கோட்டை அகழாய்வில் பெண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், கோடரி, பழங்கால பாசி மணிகள் உள்ளிட்ட 7,900க்கும் மேற்பட்ட பழமையான தொல்பொருட்கள் கிடைத்தன. இவை அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழாய்வு பணியை கடந்த 18ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். தற்போது 3 குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இதில் ஒரு குழியில் நேற்று சுடுமண்ணால் வனையப்பட்ட பெண் உருவம் கண்டெடுக்கப்பட்டது. சிறிது சிதிலமடைந்த இந்த உருவத்தில் தலை அலங்காரமும், உதட்டுச் சிரிப்பும் மெருகூட்டுகிறது. கயல் வடிவில் கண்களும், அவற்றின் புருவங்களும் கீறல் வடிவில் வரையப்பட்டுள்ளன. வாய், மூக்கு, காதுகள் தடிமனாக உள்ளன. மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு