மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் (12.09.2024 மற்றும் 13.09.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14.09.2024 முதல் 18.09.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (12.09.2024 மற்றும் 13.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 12.09.2024 மற்றும் 13.09.2024 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 14.09.2024 முதல் 16.09.2024 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இந்தப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகம் முழுவதும் மிலாது நபி கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்

டாக்டர் காந்தராஜிடம் போலீசார் விசாரணை

ராகுல்காந்தி குறித்து அவதூறு பேச்சு என்னுடன் எச்.ராஜா நேரில் விவாதிக்க தயாரா? செல்வப்பெருந்தகை சவால்