வேலூரின் கீரை கிராமம்!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி ஊராட்சியில் தொண்டான்துளசி கூட்ரோடு, ரசுலபாக்கம், பெரிய கம்பத்தம், கனகசமுத்திரம், பாறை மேடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பெரும்பாலான வயல்களில் கீரை விவசாயம் மிகவும் பிரபலம். இப்பகுதியில் எப்போதும் கீரை சாகுபடி செழித்திருக்கும். இத்தகைய சிறப்பு மிக்க லத்தேரியில் நந்தகுமார் என்ற விவசாயி தனது மனைவி ஜெயந்தி, அவரது தம்பி, அவரது மனைவி, பட்டதாரி மகன் கவுதம் என குடும்பத்துடன் கீரை சாகுபடியில் கலக்கி வருகிறார். இதையறிந்து நந்தகுமாரைச் சந்தித்தோம்.“ லத்தேரியில் சுமார் 4 ஏக்கரில் மணத்தக்காளி கீரை, காசினி கீரை, சிறுகீரை, வெந்தயக்கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணி, வல்லாரை, தண்டுக்கீரை, அரைக்கீரை, புளிச்சக்கீரை, அகத்திக்கீரை, பாலக்கீரை உள்ளிட்ட பல வகையான கீரை வகைகளைச் சாகுபடி செய்து வருகிறோம். நிலத்தைப் பதப்படுத்தி சிறு சிறு இடங்களில் பரவலாக இயற்கை முறையில் கீரை சாகுபடி செஞ்சிட்டு வரோம். நாங்கள் மக்களிடம் நேரடியாக விற்கும் போது ஒரு கட்டு கீரை ₹5க்கு விற்பனை செய்வோம். ஒரு கட்டு கீரைக்கு ஆள் செலவு கூலி எல்லாம் போக ₹2 தான் கிடைக்கும். நேரடியாக போய் விற்பனை செய்ய வேண்டுமென்றால் வண்டியில் வைத்து கொண்டுபோக நிறைய செலவாகும். இதனால உணவகங்கள், விடுதிகளுக்கு நேரடியாகவும், வியாபாரிகளுக்கு மொத்த விலைக்கும் விற்பனை செய்கிறோம்.ஒரு நாளைக்கு 500 கட்டு கீரையை விற்பனைக்கு அனுப்புவோம். கரும்பு சாகுபடியில் வருவாய் ஈட்டுவதற்கு ஒரு ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். ஆனால் உடனடி வருமானம் என்ற வகையில் ஒரு பகுதி விளைநிலத்தில் கீரை சாகுபடி செய்யத் தொடங்கி இருக்கிறோம். அரைக்கீரை, முளைக்கீரை போன்றவை விதைத்து 22 நாட்களிலேயே அறுவடைக்குத் தயாராகி விடுகிறது. அந்த வகையில் ஒரு கிலோ விதைக்கு 1000 கட்டுகள் வரை கீரை கிடைக்கிறது. அறுவடை செய்த கீரைக் கட்டுகளை கோயம்பேட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறோம்.

பொதுமக்கள் மட்டுமல்லாமல் வீதிகளில் விற்பனை செய்பவர்கள் எங்களிடம் நேரடியாக கீரைகளை கொள்முதல் செய்கிறார்கள். மற்ற காய்கறிகளைப் போல இல்லாமல் கீரைகள் கொண்டு சென்று சில மணி நேரத்திலேயே முழுவதுமாக விற்றுத் தீர்ந்து விடும். அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை பயிர் செய்றதுக்கு தைப்பட்டம் நல்ல பட்டம். இந்த மூணு கீரைக்கும் அதிக மழை தேவையில்லை. அதனாலதான் தை மாசத்துல ஆரம்பிக்கிறோம். தை மாசத்திலிருந்து ஆடி மாசம் வரைக்கும் குறைவில்லாத வருமானம்தான். செலவு எல்லாம் பெரிசா இல்லை. ஒவ்வொரு கீரையும் 5 சென்ட் நிலத்துல பயிர் செய்றேன்’’ எனக்கூறிய நந்தகுமார் சில கீரைகளின் சாகுபடி விபரங்களையும் பகிர்ந்துகொண்டார். “அரைக்கீரை விதைப்பதற்கு முன் நிலத்தை புழுதி கிளம்ப உழவு செய்ய வேண்டும். மாடுகளைப் பயன்படுத்திதான் உழவு ஓட்ட வேண்டும். சிறிய நிலம் என்பதால் டிராக்டர் பயன்படுத்த முடியாது. உழவு செய்யப்பட்ட நிலத்தில் 5 அடிக்கு ஒரு பாத்தி வீதம் கட்டவேண்டும். ஒவ்வொரு பாத்தி ஓரத்திலும் 2 அடி அகல வாய்க்கால் அமைத்தால், தண்ணீர் பாய்வதற்கு வசதியாக இருக்கும். அடியுரமாக தொழுவுரம் ஒரு டன் கொட்டி நிரப்ப வேண்டும். அதன் மீது கொஞ்சம் தண்ணீர்விட்டு, விதைகளைத் தூவி, உயிர்த் தண்ணி விடவேண்டும். 5-ம் நாள் முளைத்துவிடும். 25-ம் நாள் முதல் அறுவடை செய்யலாம். முதல் அறுவடைக்கு பிறகு, 15 நாளைக்கு ஒருமுறை அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு 15 நாளைக்கும் ஒரு தடவை யூரியா கொடுக்க வேண்டும். 5 சென்ட் நிலத்துக்கு 7 கிலோ தேவைப்படும். கீரையை 15 நாட்களுக்குள் அறுவடை செய்துவிட வேண்டும். இல்லையென்றால், பூக்கள் வளர்ந்து, பயன்படுத்த முடியாமல் போய்விடும். இந்தக் கீரை இந்தத் தோட்டத்தில் இருக்கிறது என்று தெரிந்தாலே வெளியூர் வியாபாரிகள் நேரடியாக வந்து அறுவடை செய்துகொண்டு பணத்தை கொடுத்துவிட்டு போவார்கள். முதல் தடவை ₹1,500 முதல் ₹2,000 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கும். அறுவடை வேலையும் நமக்கு மிச்சம்.

சிவப்பு மற்றும் பச்சை பொன்னாங்கண்ணி!

நிலத்தை உழவு செய்து, 10 அடிக்கு ஒரு பாத்தி கட்டவேண்டும். தொழுவுரத்தை அடிஉரமாக ஒரு டன் கொட்டவேண்டும். இந்தக் கீரைக்கு விதையெல்லாம் கிடையாது. அதனால் வெளியூரிலிருந்து நாற்றுகளாக வாங்கி வந்து நடவு செய்யலாம். 5 சென்ட் நிலத்துக்கு 200 கட்டு தேவைப்படும். நடவு செய்த ஒரு மாதம் கழித்து யூரியா 15 கிலோ போட்டால், நாற்று பச்சைக் கட்டும். செடியும் நன்கு வளரும். 10 நாட்களுக்குப் பிறகு, 15 நாளைக்கு ஒரு தடவை, 15 கிலோ யூரியா கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால், 8மாதம் வரைக்கும் பணம் பார்க்கலாம். அதிகம் மழை இருந்தாலும், ஒன்றும் ஆகாது. முதல் தடவை அறுவடை செய்யும்போது 500 கட்டு கிடைக்கும். வெளியூர் வியாபாரிகள் கட்டு ₹2 என்ற விலைக்கு வாங்கிக் கொள்வார்கள். பூச்சித் தாக்குதல் அதிகம் இருக்காது. அப்படி இருந்தால். கடையில் எண்ணெய் மருந்து 100 மில்லி வாங்கி, 20 லிட்டர் தண்ணீரில் கலந்து, வேப்பந்தழையை ஒடித்து, அதில் மருந்தை நனைத்து செடிக்கு மேலே தெளித்துவிட்டால், பூச்சிகள் வராது. இப்படி 5 சென்ட்டுக்கு 200 மில்லி மருந்தை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பூச்சி இருந்தால் மட்டும்தான் மருந்து அடிக்க வேண்டும். கீரைக்கு அதிகம் மருந்து அடிக்கக் கூடாது. ஏனென்றால், இது உடனடியாக சமைக்கப்படும் பொருள். ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தினால், அதைச் சாப்பிடுகிறவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்’’ என டிப்ஸ்களையும் வழங்கினார்.
தொடர்புக்கு:
நந்தகுமார் -63802 20191

 

Related posts

மணிமுத்தாறு அருவியில் 2 நாட்கள் குளிக்கத் தடை

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.