வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஆண் குழந்தையை பையில் வைத்து கடத்தி சென்ற பெண்: சிசிடிவி காட்சி மூலம் போலீஸ் வலை

வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி சின்னி(20)க்கு வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 28ம்தேதி அதிகாலை 2 மணியளவில் ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாய் மற்றும் குழந்தைக்கு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை சின்னி எழுந்து பார்த்தபோது, அருகே படுக்க வைத்திருந்த குழந்தையை காணாமல் கதறி அழுதார். டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் வந்து விசாரித்தபோது குழந்தையை யாரோ கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து புகாரின்படி வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். தகவல் அறிந்து எஸ்பி மணிவண்ணன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் மருத்துவமனை மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பிரசவ வார்டில் புகுந்த பெண், கட்டைப் பையுடன் வெளியே செல்வது பதிவாகியிருந்தது. அவருடன் ஒரு சிறுவனும் நடந்து சென்றுள்ளான். அந்த பெண் பையில் குழந்தையை வைத்து கடத்தி சென்றிருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன்பேரில், அந்த பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்