வேலூர் கோட்டை அருங்காட்சியகம்

வேலூா் அரசு அருங்காட்சியகமானது வரலாற்றுச் சிறப்புமிக்க வேலூா் கோட்டையினுள் அமைந்துள்ளது. இவ்வருங்காட்சியகமானது அன்றைய வட ஆற்காடு மாவட்ட (தற்போதைய வேலூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள்) முக்கியத்துவத்தினை விளக்கும் விதமாக, 6-வது மாவட்ட அரசு அருங்காட்சியகமாக 1985-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இவ்விரு மாவட்டங்களில் அதிக அளவில் உள்ள தாவர, விலங்கின வளங்களையும், புராதன பண்பாட்டுச் சின்னங்களையும் கொண்டுள்ளது.வேலூா் மாவட்டம் பழங்காலத்தில் பல்லவர், சோழர், சம்புவராயர் மற்றும் விஜயநகர மன்னர்களது ஆளுகையின்கீழ் இருந்துள்ளது. சம்புவராயர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வேலூா் மாவட்டமானது தமிழக வரலாற்றில் முக்கிய இடத்தை வகித்தது. விஜயநகர பேரரசின் இறுதிக் காலக்கட்டத்தில், வேலூா் அவர்களது தலைநகராகவும் திகழ்ந்தது. பின்னர் ஐரோப்பாவில் இருந்து வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துணியும்போது, ஆற்காடு நவாப்கள் இவ்விருவருக்கும் மாறிமாறி ஆதரவளித்தனர். வேலூா் கோட்டையானது இந்த தொடர் தாக்குதலுக்கு சாட்சியானது.

1806ம் ஆண்டு வேலூா் கோட்டையினுள் தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சிப்பாய் புரட்சி நடைபெற்றது. இங்குதான் திப்புவின் குடும்ப உறுப்பினர்கள் அடைக்கப்பட்டு இருந்தனர். மேலும் 1815ம் ஆண்டு இலங்கையை (கண்டி) ஆண்ட கடைசி தமிழ் மன்னரானவிக்கிரம ராஜ சிங்கன் இங்கே சிறை வைக்கப்பட்டு இருந்துள்ளார். இப்படி பல்வேறு வரலாற்றுச் சம்பவங்கள் வேலூா் அரசு அருங்காட்சியகத்தின் கலை, தொல்லியல், மானுடவியல், புவியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் காட்சிப் பெட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வேலூா் அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில், 16-அடி உயரமுள்ள டைனோசரஸின் கண்ணாடி இழை மாதிரியானது, பார்வையாளர்்களை கவரும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வேலூா் கோட்டையில் கிடைத்த 18-ம் நூற்றாண்டைச் சார்ந்த இரு பீரங்கிகள் நுழைவு வாயிலில் உள்ளன. இவ்வருங்காட்சியகத்தில் அமைந்துள்ள கற்சிற்பப் பூங்காவில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கற்சிற்பங்களும், வீரக்கற்களும், கல்வெட்டுகளும், இரு வெடிமருந்துக்குடுவைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.மாணவர்கள், சுற்றுலா பார்வையாளர்களை கவரும் விதமாக இவ்வருங்காட்சியகத்தில் எட்டு விதமான காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதலாவதாக மாவட்ட அறிமுகக் கூடத்தில் நிழற்படங்கள், வேலூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அமைந்துள்ள, புராதன நினைவுச்சின்னங்கள், சுற்றுலாத்தலங்கள், புவியியல் வரைபடங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்ததாக கற்சிற்பங்கள் கூடத்தில் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த மன்னர்களான பல்லவர்கள், சோழர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களது காலத்திய கற்சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

முந்தையவரலாறு என்பது, கற்காலம், செம்புக்காலம் மற்றும் இரும்புக்காலத்துடன் தொடர்புடையது. பழைய கற்கால கற்கருவிகள், கைக்கோடாரிகள், புதிய கற்கால கல் ஆயுதங்கள், முதுமக்கள்தாழி மற்றும் மட்கலன்கள், ஈமப்பேழைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் அஞ்சல்தலைகள் கூடத்தில் பல்வேறு நாட்டு அஞ்சல்தலைகள், தாவர மற்றும் விலங்கின அஞ்சல்தலைகள், புராதனச் சின்னங்களின் அஞ்சல்தலைகள், தேசத்தலைவர்களின் அஞ்சல்தலைகள் அழகுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கலைக்கூடத்தில் சமகால ஓவியங்கள் காட்சியில் உள்ளன. அவற்றில் எண்ணெய் வண்ண ஓவியம், நீர்வண்ண ஓவியம், அக்ரிக் ஓவியம் ஆகியன அடங்கும்.இயற்கை அறிவியல் கூடத்தில் ஈரநிலையில் பதப்படுத்தப்பட்ட மற்றும் உலர்நிலையில் பதப்படுத்திய விலங்கினங்கள், நீர்வாழ் பறவை இனங்கள், கடல்வாழ் உயிரினங்கள் காட்சியில் உள்ளன. கழுதைப்புலி மற்றும் மான் மற்றும் வாழும் சூழ்நிலையில், சூழலியல் காட்சிப்பெட்டியில் உள்ளது.

இதேபோல் படிமக் கூடம், நாணயவியல் கூடம், மானுடவியல் கூடம் ஆகியவற்றிலும் அந்தந்த தலைப்புகளுக்கேற்ற பொருட்களும், தகவல்களும், படிமங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டிய இடங்களில் இது முக்கியமான இடமாகும்.

 

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது