ரவுடிகளுக்கு செல்போன் கொடுத்து உதவி வேலூர் மத்திய சிறை மனநல ஆலோசகர் கைது

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் பணியாற்றிய மனநல ஆலோசகர், ரவுடிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு சிறை பறவையாக செயல்பட்டதால் அவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காகவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் `சீர்திருத்தத்தின் சிறகுகள்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஒப்பந்த அடிப்படையில் மனநல ஆலோசகர் ஒருவரை நியமித்து கைதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலத்தை சேர்ந்த மனநல ஆலோசகர் அருணாச்சலம் (24) என்பவர் வேலூர் சிறையில் மனநல ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவர் தினமும் வேலூர் சிறைக்கு வந்து கைதிகளிடம் மனஅழுத்தம் நீங்கவும், உடல் நல பாதிப்பு இன்றி வாழவும் ஆலோசனைகள் வழங்கி வந்தார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி மனநல ஆலோசகர் அருணாச்சலம் சிறைக்கு வந்து சென்றார்.

பின்னர் அவர், கைதிகளுக்கு நெருக்கமானவர்களிடம் சில தகவல்களை தனது செல்போன் மூலம் தெரிவித்ததாக தெரிகிறது. இதையறிந்த சிறைத்துறையினர் அருணாச்சலத்தை ரகசியமாக கண்காணித்தனர். அவரது செல்போனில் இருந்து யார் யாரிடம் பேசி வந்தார்? எனவும் ஆய்வு செய்தனர். அதில், வேலூர் சிறை கைதிகளின் உறவினர்கள் மற்றும் ரவுடிகளிடம் அவர் பேசி வந்தது தெரிந்தது.

குறிப்பாக மனநல ஆலோசனை வழங்க சிறைக்கு சென்றவர், கைதிகள் கூறும் சில தகவல்களை சிறைக்கு வெளியே மற்ற ரவுடிகள் மற்றும் உறவினர்களிடம் பரிமாறி வந்துள்ளார். இதற்காக அவர் பணம் வாங்கினாரா? என போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையே இதுகுறித்து பாகாயம் போலீசில் ஜெயிலர் அருள்குமரன் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், கைதிகளிடம் இருந்து தகவல்களை பரிமாற்றும் சிறை பறவை போல செயல்பட்டு வந்ததும், ரவுடிகளுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்ததால் மனநல ஆலோசகர் அருணாச்சலத்தை போலீசார் நேற்றிரவு கைது செய்து செல்போனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஜாபர்கான்பேட்டை பகுதியில் சிறுவன் வெட்டிக்கொலை: அடையாறு ஆற்றில் சடலம் வீச்சு

வீட்டில் தனியாக இருந்தபோது பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது

திருமணம் செய்வதாக கூறி பணம், நகை மோசடி செய்ததுடன் காதலியை சாதி பெயரை சொல்லி திட்டிய நபருக்கு 5 ஆண்டு சிறை: எஸ்.சி, எஸ்.டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு