வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தக்காளி, கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விலை வீழ்ச்சி

*வரத்து அதிகரிப்பு எதிரொலியால் குறைந்தது

வேலூர் : வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி, கத்திரிக்காய் உள்பட பெரும்பாலான காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்கள் மற்றும் ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அதேபோன்று வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள் மொத்தம் மற்றும் சில்லரை விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும் காய்கறிகள் வாங்க வருகின்றனர். அதிகாலை 3 மணி முதல் மார்க்கெட்டில் வியாபாரம் தொடங்குவதால் அதிகாலை முதலே பரபரப்பாக காணப்படும்.இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக நேதாஜி மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து குறைந்திருந்தால் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக தக்காளி ஒரு கிலோ ₹200 வரை விற்பனை செய்யப்பட்டது. இஞ்சி ₹300க்கும், பீன்ஸ் ₹150க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த சில வாரங்களாக படிப்படியாக தக்காளி விலை குறைந்தது. நேற்று பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்துள்ளது.

இதற்கிடையில் வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று ஒரு கிலோ தக்காளி ₹8 முதல் ₹20 வரை விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ புதுஇஞ்சி ₹80, அவரைக்காய் ₹50, பெரிய வெங்காயம் ₹30, சாம்பார் வெங்காயம் ₹60, உருளைகிழங்கு ₹25, கேரட் ₹15, வெண்டைக்காய் ₹15, பீட்ரூட் ₹15, முருங்கைக்காய் ₹15, பீன்ஸ் ₹35, சுரைக்காய் ₹15, பச்சைமிளகாய் ₹30, பூண்டு ₹150க்கும் விற்கப்படுகிறது. காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை குறைந்துள்ளது. ஆவணி மாதத்தில் சுப முகூர்த்தம் நாட்களில் விலை குறைந்து இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி