வேலூர்- காட்பாடி சாலையில் சென்றபோது திறந்தவெளி கழிவுநீர் கால்வாயில் மொபட்டுடன் தவறி விழுந்த முதியவர்

*பல ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு எப்போது?

வேலூர் : போக்குவரத்து நெரிசல் மிக்க வேலூர்- காட்பாடி சாலையில் சென்றபோது திறந்தவெளி கழிவுநீர் கால்வாயில் மொபட் உடன் தவறி விழுந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூரில் போக்குவரத்து நெரிசல் மிக்க மக்கான் சிக்னல் அருகே காட்பாடி சாலையில் இருசக்கர உதிரி பாக கடைகள், பஞ்சர் கடை, ஆட்டோ பைனான்ஸ் உட்பட 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு செல்லும் பகுதியில் திறந்தவெளி கழிவுநீர் கால்வாய் உள்ளது.

இந்த கழிவுநீர் கால்வாய் முழுவதும் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் சென்று வருகிறது. மேலும் மழைகாலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கடைகளுக்கு முன்பு தேங்கி நிற்பதால் வியாபாரிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அவ்வழியாக நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு கழிவுநீர் தேங்கிவிடுவதால் பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து பல ஆண்டுகளாக மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம்.

சிறு, சிறு மழை பெய்தாலும் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் கழிவுநீர் ஆறாக செல்கிறது. இந்த சம்பவத்தை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கடைகளின் உரிமையாளர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கடைகளின் முன்பு கருப்பு கொடி கட்டி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதற்கிடையில் நேற்று காட்பாடி சாலை வழியாக ஒரு முதியவர் ஹெல்மெட் அணிந்தபடி மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மற்ற வாகனத்திற்கு வழிவிடுவதாக சற்று தள்ளி ஓரமாக சென்றதாக கூறப்படுகிறது. அவ்வாறு செல்லும்போது திறந்த வெளி கழிவுநீர் கால்வாயில் மொபட்டுடன் தவறி விழுந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் அங்கிருந்த வியாபாரிகள் உடனடியாக கழிவுநீரில் விழுந்த முதியவரை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து மொபட்டை மீட்டனர்.

சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக முதியவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கடை வியாபாரிகள் கூறுகையில், மக்கான் முதல் நேஷ்னல் சர்க்கிள் வரை செல்லும் காட்பாடி சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாராமலும் கால்வாய் அமைக்காலும் அப்படியே உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற முடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதற்கு தீர்வு கிடைக்காமல் தவித்து வருகிறோம். குறிப்பாக மக்கான் அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்த வெளி பகுதியாக உள்ளது.

இதுகுறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மாநகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை. இதனால் முதியவர் மொபட் உடன் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டனர். இதனால் அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபாதையுடன் கால்வாய் அமைக்க உடனடி நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.

ஹெல்மெட் அணிந்து வந்ததால் தப்பினார்

மொபட்டில் வந்த முதியவர் ஹெல்மெட் அணிந்து கொண்டு பயணம் செய்தார். இதனால் அவர் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தபோது அருகில் இருந்த கான்கிரீட் கல்வெட் மீது விழுந்தார். இருப்பினும் ஹெல்மெட் அணிந்து கொண்டு இருந்ததால் தலை கான்கிரீட் சுவர் மீது விழுந்தும் காயம் அடையவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது