வேலூர் கோட்டை (வரலாற்றுச் சின்னம்)

வேலூர் கோட்டை 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அகழியுடன் கூடிய ஒரு பெரிய கோட்டையாகும். இது வேலூர் நகரின் மையப்பகுதியில் விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்டது. 1566ஆம் ஆண்டு விஜயநகரப் பேரரசின் பேரரசர் சதாசிவ ராயரின் கீழ் துணைத் தலைவர்களான சின்ன பொம்மி நாயக்கர் மற்றும் திம்மா நாயக்கர் ஆகியோரால் வேலூர் கோட்டை கட்டப்பட்டது.

கருங்கல்லால் கட்டப்பட்ட அழகிய இக்கோட்டை இதன் பெரிய மதில்கள், அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளது. தாலிகோட்டா போருக்குப் பிறகு சந்திரகிரியை அவர்களின் 4வது தலைநகராகக் கொண்டு விஜயநகர ஆட்சி மீண்டும் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து கோட்டை முக்கியத்துவம் பெற்றது. 17 ஆம் நூற்றாண்டில் ராயஸ் என்ற பட்டத்தை வைத்திருந்த அரவிடு வம்சத்தினர் இந்த கோட்டையில் வசித்து வந்தனர். 1620 களில் தோப்பூர் போரில் இதை ஒரு தளமாக பயன்படுத்தினர்.

ராயா குடும்பத்தின் இரு பிரிவினரிடையே ராயா பட்டத்தை உரிமை கோருவதற்காக இந்த பெரிய போர் நடந்தது. கோட்டையின் உரிமையானது விஜயநகரப் பேரரசர்களிடம் இருந்து, பிஜப்பூர் சுல்தான்கள், மராட்டியர்கள், கர்நாடக நவாப்கள் மற்றும் இறுதியாக இந்தியா சுதந்திரம் பெறும் வரை கோட்டை ஆங்கிலேயர்களிடம் சென்றது.

இந்திய அரசு தொல்லியல் துறையின் கீழ் கோட்டையை பராமரித்துவருகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, ​​திப்பு சுல்தானின் குடும்பமும் , இலங்கையின் கடைசி மன்னரான ஸ்ரீ விக்ரம ராஜசிங்கவும் கோட்டையில் கைதிகளாக அடைக்கப்பட்டனர். ஸ்ரீரங்க ராயரின் விஜயநகர அரச குடும்பத்தின் படுகொலைக்கும் இது சாட்சி. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முதல் குறிப்பிடத்தக்க ராணுவக் கிளர்ச்சி வேலூர் சிப்பாய்க் கலகம் 1806ல் இந்தக் கோட்டையில் வெடித்தது.

திப்புவின் குடும்பத்தினர் 1806 கிளர்ச்சிக்குப் பிறகு கல்கத்தாவில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டனர். 1947 இல் இந்தியா விடுதலை பெறும்வரை இக் கோட்டை பிரிட்டிஷாரிடமே இருந்தது. கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் இந்துக் கோயில், கிறிஸ்டியன் செயின்ட் ஜான்ஸ் தேவாலயம் மற்றும் ஒரு முஸ்லீம் மசூதி உள்ளது. இதில் ஜலகண்டேஸ்வரர் கோயில் அதன் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுக்குப் பிரபலமானது.

Related posts

ஒட்டன்சத்திரம் அருகே கோழி பண்ணையில் தீ விபத்து

48 மீனவ கிராமங்களையொட்டி குமரி கடற்பகுதியில் இன்று சஜாக் ஆபரேசன்: கடலோர பாதுகாப்புக்குழும போலீசார் தீவிர பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணியிடங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும்: தமிழ்நாடு அரசு விளக்கம்