வேலூர் மாநகராட்சியில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் பைப்லைன் உடைந்து தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்

 

*உடனுக்குடன் சீரமைக்க கோரிக்கை

வேலூர் : வேலூர் மாநகராட்சியில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் பைப் லைன் உடைந்து நாள்தோறும் தண்ணீர் வீணாகி வருகிறது. உடைந்த பைப்லைன்களை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், வீடுகளில் குடிநீர் விநியோகம் செய்ய குழாயில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக 60 வார்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்கள் சரிவர மூடாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் அவ்வழியாக செல்லவே பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல், பல இடங்களில் குடிநீர் பைப்லைன் உடைந்து, தினந்தோறும் தண்ணீர் சாலையில் வீணாகி ஓடுவதால், சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. வீணாகும் குடிநீர் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் சரி வர நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேலூர் சத்துவாச்சாரி கோர்ட் சாலையில் இருந்து வள்ளலார் செல்லும் சாலையில் 3 இடங்களிலும், ரங்காபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, வள்ளலார் குடிநீர் தொட்டி அருகே, ரங்காபுரம் வசந்தம் நகர் 3வது தெரு, விருதம்பட்டு, பலவன்சாத்து ஆசிரியர் சுப்பிரமணி தெரு உள்ளிட்ட மாநகராட்சியில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக பைப்லைன் உடைந்து, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் ஓடுகிறது.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீர்
பைப்லைன் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.

இதுபற்றி புகார் கூறினாலும் உடனுக்குடன் சரிசெய்வதில்லை. வாரக்கணக்கிலும், மாதக்கணக்கிலும் அப்படியே விட்டு விடுகின்றனர். அதேபோல் திட்டப்பணிகளுக்காக பள்ளம் தோண்டும் போதும் பைப்லைன் உடைந்து, தண்ணீர் வீணாகி வருகிறது. உடனடியாக பைப்லைனை சீரமைப்பதில்லை. இதனால் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வீணாகிறது. இதனால் பல பகுதிகளில் குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. எனவே உடைந்த பைப்லைனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு