வேலூர் கலெக்டர் அலுவலகம் முதல் கிரீன் சர்க்கிள் வரை 1.2 கி.மீ தூரம் சர்வீஸ் சாலை இருபுறமும் அகலப்படுத்தும் பணி தொடங்கியது

*நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர் : வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னை மார்க்க சர்வீஸ் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில் செல்லும் பஸ்களும், ஆந்திராவில் இருந்து சென்னை மார்க்கத்தில் செல்லும் வாகனங்களும், உள்ளூர் வாகனங்களும் என கடும் போக்குவரத்து நெரிலில் சர்வீஸ் சாலை சிக்கி தவிக்கிறது.

அதேபோல் கலெக்டர் அலுவலகம் தொடங்கி கிரீன் சர்க்கிள் வரை தேசிய நெடுஞ்சாலையின் பெங்களூரு மார்க்க சர்வீஸ் சாலையும் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இச்சிக்கலுக்கு தீர்வு காண முதலில் கலெக்டர் அலுவலகம் தொடங்கி கிரீன் சர்க்கிள் வரை தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு பக்க சர்வீஸ் சாலையிலும் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை அகலப்படுத்த வேண்டும் என்றும், அதேபோல் கலெக்டர் அலுவலகம் தொடங்கி வள்ளலார் வரையுள்ள சர்வீஸ் சாலையையும் இரண்டு பக்கமும் அகலப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

அதற்கேற்ப தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கிரீன் சர்க்கிள் தொடங்கி வள்ளலார் வரை சர்வீஸ் சாலையை அகலப்படுத்த முடிவு செய்தது. இதற்காக சர்வீஸ் சாலையின் இருபுறமும் உள்ள கட்டிடங்களிலும் மார்க் செய்யப்பட்டது. இதை எதிர்த்து தனியார் ஒருவர் வழக்கு தொடர, சர்வீஸ் சாலையை அகலப்படுத்தும் பணி தாமதமானது.

ஒரு வழியாக இந்த தனியார் வழக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஆதரவாக முடிவுக்கு வந்தது.இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், வள்ளலார் வரை சர்வீஸ் சாலையை அகலப்படுத்தும் முடிவை தற்காலிகமாக கைவிட்டது. இதற்கு வள்ளலார் பகுதியில் வாகனங்கள் கடந்து செல்ல ஒரு சப்வேயும், பெருமுகையில் மேம்பாலமும் வந்ததே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் முதற்கட்டமாக வேலூர் சத்துவாச்சாரியில் கலெக்டர் அலுவலகம் தொடங்கி கிரீன் சர்க்கிள் வரை 1.2 கி.மீ தூரத்துக்கு இரண்டு பக்கமும் மழைநீர் வடிகால்வாயை அகற்றி, தற்போதுள்ள 6 மீட்டர் அகலமான சர்வீஸ் சாலையை 10 மீட்டர் அகலம் கொண்ட சர்வீஸ் சாலையாக மாற்றவும், மழைநீர் வடிகால்வாயை அதை தாண்டி அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியுடன் கிரீன் சர்க்கிளில் சுரங்க நடைபாதை அமைக்கும் பணியையும் இணைத்து மொத்தம் ₹7.2 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. இந்த பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அலமேலுமங்காபுரம் வரை நெரிசல்

தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்போது சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் முதல் வள்ளலார் வரை இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது. அப்ேபாது முக்கிய பிரமுகர்களின் தலையீடுகளால் சர்வீஸ் சாலையின் அகலம் குறைக்கப்பட்டது. தற்போது வாகனங்கள் பெருகி உள்ள நிலையில் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து வள்ளலார், அலமேலுமங்காபுரம் வரை போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வெளியே வரும் வாகனங்கள், சர்வீஸ் சாலையில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் என சர்வீஸ் சாலை முழுவதுமே கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

சர்வீஸ் சாலைகளில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி பஸ்கள், வேன்கள் போன்றவை வரும் போது எதிரே வரும் வாகனங்களால் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் நெரிசலில் சிக்கி நிற்கின்றன. எனவே பெருகி வரும் வாகனங்களுக்கு ஏற்ப இந்த பிரச் னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் வேலூரில் இருந்து அலமேலுமங்காபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலைகளை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது: உச்சநீதிமன்றம்

நெய்வேலி என்எல்சி 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு..!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்