வெள்ளாமைக்கு துணை நிற்கும் நுண்ணுயிரிகள்!

உலகம் முழுவதும் விவசாயம்தான் பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் இன்றியமையாத அடிப்படை. வெற்றிகரமான விவசாயம் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், மக்களுக்கு நஞ்சில்லாத உணவை வழங்கவும் பங்களிக்கிறது. இன்றைய கால வேளாண்மைக்கு இரண்டு வகையான இடுபொருட்கள் அவசியம். ஒன்று பயிருக்கு ஊட்டம் வழங்கும் உரங்கள். மற்றொன்று பயிர்
களைக் காக்கும் ரசாயனங்களாகிய பூச்சி மருந்துகள். வளங்குன்றா வேளாண்மை என்பது குறைந்த செலவில் இயற்கை வளங்களை பேணிக்காப்பது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பாதுகாப்பாக இருப்பது. இதற்கு உதவியாக இருப்பது உயிர் உரங்கள் மற்றும் உயிரிப் பூச்சிக்கொல்லிகள். இந்த இரண்டு பணிகளையும் பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிரிகள் செய்கின்றன.

உண்மையில் நுண்ணுயிரிகள் என்றால் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் நோய் உண்டாக்கும் என்றுதான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உணவு உற்பத்திக்கும், நம்மை பாதுகாக்கவும் நுண்ணுயிரிகள் உதவுகின்றன.வேளாண்மையில் நுண்ணுயிரிகள் நுட்பத்தில் முதல் பிரிவே உயிர் உரங்கள்தான். உயிர் உரங்கள் ரசாயன உரங்களுக்கு மாற்றாக குறைந்த செலவு பிடிக்கும் தொழில்நுட்பம் ஆகும். இவை மண்ணில் இயற்கையாக இருக்கும் நுண்ணுயிர்கள் ஆகும். ஆய்வுக்கூடங்களில் செயற்கையாக வளர்க்கப்பட்டு, வயல்வெளிகளில் பரிசோதிக்கப்பட்டு, ஆய்வகங்களில் சுத்தப்படுத்தப்பட்டு அதற்கு உகந்த கலவையில் கலக்கப்பட்டு விவசாயிகளுக்கு திரவ வடிவில் கிடைக்கிறது.

உயிர் உரங்களை விதையுடன் கலந்தோ, நாற்றில் நனைத்தோ அல்லது நடவு வயலிலோ தெளிக்கலாம். உயிர் உரங்கள் எனப்படும் நுண்ணுயிர்கள் இயற்கையில் மண்ணில் இருக்கும் தழை, மணி, சாம்பல் மற்றும் துத்தநாகம் சத்துக்களைக் கரைத்து பயிர்களுக்கு எளிதாகவும், மெதுவாகவும் அளிக்க வல்லமை பொருந்தியவை. இதனால் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் தேவையான நேரத்தில் அளவில் எளிதில் கிடைக்கிறது. மண் வளம் காப்பதிலும் இயற்கை விவசாயத்திலும் உயிர் உரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் மண்ணில் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றன.

நுண்ணுயிர் உரங்கள் பயன்பாட்டினால் ரசாயன உரங்களின் தேவை குறைவதுடன், சுற்றுப்புறச் சூழல் மாசுபாடும் குறைகிறது. உரங்களுக்காக செலவிடும் அன்னியச்செலாவணி குறைகிறது. மானாவாரி, இறவை விவசாயத்திற்கு மட்டுமின்றி சிறு, குறு விவசாயிகளுக்கும் உகந்ததாகும். உயிர் உரங்கள் இடுவதினால் 10 முதல் 40 சதவீதம் வரை ரசாயன உரச்செலவு குறைகிறது.

எப்படி வேலை செய்கின்றன?

பாக்டீரியா, பூசணம், ஆக்டினோமைசீட்ஸ் போன்ற பல வகை நுண்ணுயிரிகள் நமக்கு பல நன்மைகளைச் செய்கின்றன. ஒரு பிடி மண்ணில் கோடிக்கணக்கில் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இதில் முதல் வகை காற்றிலுள்ள தழைச்சத்தினை பயறு வகைப் பயிர்களுடன் கூட்டுறவு வாழ்க்கை வாழ்ந்து பயிர்களின் வேர் முடிச்சில் தழைச்சத்தினை நிலைநிறுத்தி மண்ணில் சேர்க்கின்றன. பயிருடன் சேராமல் தனித்து வாழ்ந்து காற்றில் உள்ள தழைச்சத்தினை நிலைநிறுத்துகின்றன. மண்ணில் உள்ள சத்துக்களைக் கரைத்து பயிருக்கு தருகின்றன. பயிர்களின் இலை மேல் வளர்ந்து நீராவிப் போக்கினைக் கட்டுப்படுத்தி பயிருக்கு வறட்சியைத் தாங்கி வளரும் சக்தியை தருகின்றன. டிரைக்கோடெர்மா, சூடோமோனாஸ், வெர்டிசீலியம் போன்றவை பயிர்களைத் தாக்கும் நோய்க் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும் எதிர் நுண்ணுயிரிகளாக செயல்படுகின்றன
.
முக்கியமான பணிகள்

நுண்ணுயிரிகள் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பயிருக்கு கிடைப்பதை எளிதாக்குகின்றன. பயிர்களின் வேர்ப்பகுதி ஒரு உயிரோட்டமான பகுதியாகிறது.விதைகளின் முளைப்புத்திறன், வேர்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது. உரம் மற்றும் தண்ணீரின் உபயோகம் அதிகரிக்கிறது. பயிர் வறட்சியைத் தாங்குகிறது.மண்வளம் கூடுகிறது. தீய விளைவுகள் ஏதும் இல்லை. பயிர்களில் நோயின் தாக்கம் குறைகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்தது. 25 சதவீதம் தழைச்சத்து சேமிக்கப்படுகிறது. பயிருக்கு இடும் உரத்தில் 25 சதவீதத்தைக் குறைத்துக்கொள்ளலாம். மகசூல் 20-30 சதம் கூடுதலாக கிடைக்கிறது. வறட்சி, உப்பு மண், களர் ஆகியவற்றிலிருந்து பயிரைக் காக்கலாம். ரசாயன உரங்களைக் காட்டிலும் மலிவானது. திரும்பத் திரும்ப இடவேண்டிய அவசியம் இல்லை.
– வி.குணசேகரன்
வேளாண்மை துணை இயக்குனர், தர்மபுரி.

Related posts

தினம் தினம் தாக்குதல் நடத்தும்; ஹமாஸ், ஹிஸ்புல்லா குழுக்களை ஒழிக்கும் வரை போர் தொடரும்: ஐநா பொதுச்சபையில் இஸ்ரேல் பிரதமர் பரபரப்பு பேச்சு

முக்கிய சந்திப்பு

கல்வி, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்க கோரிக்கை பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு: மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தல்