தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்: தலைவர்கள் இரங்கல்


சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். கடந்த 3ஆம் தேதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் வெள்ளையன் சிகிச்சை பெற்று வந்தார். சாதாரண பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவா், செப்.5-ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் நுரையீரல் தொற்றுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளையன் காலமானார்.

விக்கிரமராஜா இரங்கல்
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவுக்கு வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அவர்களின் இழப்பு வணிகர்களுக்கு பேரிழப்பாகும். வணிகர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் ஓடோடி வரும் தலைவராக அவர் இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

செல்வபெருந்தொகை இரங்கல்
வெள்ளையன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தொகை இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்; வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் த.வெள்ளயன் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். தமிழ்நாட்டில் உள்ள வணிகர்களின் குரலாக , சாதி, மத, அரசியல் பேதமின்றி செயல்பட்டு வந்தவர் த.வெள்ளையன். இவரது வணிகர் சங்க பேரவை மாநிலம் முழுவதும் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

வணிகர்களின் காவலனாக இருந்து வந்தவர். அன்னாரின் மறைவு வணிகர் சங்கப் பேரவைக்கும், வணிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பாகும். அன்னாரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வணிகர் சங்கத்தினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளையன் மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மிகச்சிறந்த தமிழ் உணர்வாளர்; அவருடைய இழப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பாகும். ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர் வெள்ளையன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு