வேளாங்கண்ணி பேராலயத்தில் கவர்னர் சிறப்பு பிரார்த்தனை: கருப்பு கொடி காட்டிய காங்கிரஸ், விசிகவினர் கைது

நாகப்பட்டினம்: நாகூர் மீன்வள பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவுக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, வேளாங்கண்ணி பேரலாயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். கவர்னருக்கு கருப்பு கொடி காட்டிய காங்கிரஸ், விசிகவினர் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் 9வது பட்டமளிப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் பெலிக்ஸ் வரவேற்றார். மும்பை இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக இயக்குநர் மற்றும் மத்திய மீன்வள கல்வி நிலைய துணைவேந்தர் ரவிசங்கர் சிறப்புரையாற்றினார். விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். 391 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

மீன்வள பட்டப்படிப்பு படித்த மாணவி ரம்யவீணா 13 பதக்கங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வேளாங்கண்ணி தனியார் ஓட்டலில் தங்கயிருந்த கவர்னர் ஆர்.என்.ரவி, நேற்று காலை குடும்பத்துடன் வேளாங்கண்ணி பேராலயம் சென்றார். பின்னர் அங்கு நடந்த சிறப்பு திருப்பலியில் பங்கேற்றார். தொடர்ந்து பட்டமளிப்பு விழா நடந்த நாகூரில் உள்ள பல்லைக்கழகத்துக்கு காரில் சென்றார். கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்ட காங்கிரஸ் தலைவர் அமிர்தராஜா தலைமையிலான நிர்வாகிகள், விசிக மாவட்ட செயலாளர் பேரறிவாளன் தலைமையிலான நிர்வாகிகள் புத்தூர் ரவுண்டானா அருகே கருப்பு கொடி காட்ட நேற்று காலை திரண்டனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 15 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு