வேளாங்கண்ணிக்கு மாலை போட்டதால் மதுபானம் அருந்துவதற்கு பதிலாக போதை ஊசி செலுத்திய வாலிபர்: ஆபத்தான நிலையில் சிகிச்சை

பெரம்பூர்: வேளாங்கண்ணிக்கு மாலை போட்டதால் மது அருந்துவதற்கு பதிலாக போதை ஊசி செலுத்திய வாலிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.புளியந்தோப்பு கனகராஜ் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (22), கூலி தொழிலாளி. இவரது மனைவி யுவராணி (20). இவர்களுக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. போதைக்கு அடிமையான பாஸ்கர், தற்போது வேளாங்கண்ணி கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பதால், மது அருந்தாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்த பாஸ்கர், சற்று நடுக்கமாக உள்ளது எனக் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் பாஸ்கருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பாஸ்கர் வலி நிவாரணி மாத்திரையை தண்ணீரில் கலந்து தனக்குத்தானே ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டது தெரிய வந்தது.

மேலும் வேளாங்கண்ணிக்கு மாலை அணிந்துள்ளதால் மது குடிக்க கூடாது என்பதற்காக, ரயில் மூலம் ஆந்திர மாநிலம் விஜயவாடா சென்று, போதை மாத்திரைகளை வாங்கி வந்துள்ளார். 3 நாட்களுக்கு முன்பு ஒரு மாத்திரையை கரைத்து ஊசி மூலம் செலுத்திக்கொண்டார். மீண்டும் ஒரு மாத்திரையை கரைத்து செலுத்தியபோது அவருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது