வேளாண் சுற்றுலா மையமான தரிசு நிலம்!

தமிழகத்தில் 80, 90 காலகட்டங்களில் பெரும்பாலான குடும்பங்கள் கிராமங்களைச் சார்ந்து இருந்தன. வயல்வெளிகளில் விவசாய வேலைகளைப் பார்த்துக் கொண்டே பள்ளிகளுக்குச் சென்று படித்தவர்கள் அதிகம் இருந்தனர். ஆனால் தற்போது நகர்ப்புறங்களின் அசுர வளர்ச்சியால் இன்றைய இளைய தலைமுறையினர் விவசாயத்தின் நேரடி அனுபவத்தைப் பெறுவதில்லை. இதன்காரணமாக மாணவர்களுக்கு விவசாயம் குறித்த நேரடி அனுபவம் கிடைக்க பள்ளி, கல்லூரிகளில் இருந்து அந்தந்த கல்வி நிறுவனங்களே மாணவ- மாணவிகளை விவசாய சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கின்றன. குறிப்பாக வட மாநிலங்களில் பல இடங்களில் இதுபோன்ற வேளாண் சுற்றுலாக்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் நமது தமிழகத்தில் வேளாண் சுற்றுலா அந்தளவுக்கு அதிகரிக்கவில்லை. ஆனாலும் தற்போது பல இடங்களில் வேளாண் சுற்றுலா செழிக்கும் வகையில் சில விவசாயிகள் தங்கள் பண்ணையை மேம்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள தனக்கரைகுளத்தில் 9 ஏக்கரில் வேளாண் சுற்றுலா மையமாகவே தனது பண்ணையை வடிவமைத்து வருகிறார் ஐடி ஊழியரான அருண்குமார். ஐடி வேலை செய்துகொண்டே தனது பண்ணை பராமரிப்பு பணியில் தீவிரமாக செயல்பட்டு வரும் அருண்குமாரை சந்தித்தோம்.

“எனக்கு வள்ளியூர்தான் சொந்த ஊர். ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். உணவுப்பொருட்களில் ரசாயனம் கலந்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நன்றாக அறிவேன். இதனால் ரசாயனக் கலப்பு இல்லாத இயற்கை உணவை சாப்பிடுவதையே நான் விரும்புகிறேன். எனது குழந்தைகளுக்கும் அதையே கொடுக்க நினைத்தேன். ஆனால் சந்தையில் அத்தகைய உணவுப்பொருட்கள் கிடைப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை. அப்போதுதான் நமக்குத் தேவையான உணவை நாமே பயிரிட்டு விவசாயம் செய்தால் என்ன? என்று யோசித்தேன். அதன்பயனாக கடந்த 2016ம் ஆண்டில் ராதாபுரம் அருகே தனக்கரைகுளம் பகுதியில் 9 ஏக்கர் தரிசு நிலத்தை வாங்கி அதைப் பண்படுத்தி இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கினேன். விவசாயம் செய்யத் தொடங்கியபோது எந்த லாப நோக்கத்தோடும் ஆரம்பிக்கவில்லை.

முருங்கை, தென்னை உட்பட பல்வேறு வகையான மரங்களை நட்டு வளர்த்து வருகிறேன். வாழை, மாதுளை பழ வகைகளை நட்டு வளர்த்து பராமரித்து வருகிறேன். ஒரு கட்டத்தில் தேவைக்கு அதிகமாக கிடைத்த தேங்காய், நெல்லிக்காய் உள்ளிட்டவற்றை சந்தைப்படுத்த முடிவெடுத்தேன். அப்போதுதான் காடு ஆர்கானிக் என்ற இணையதளத்தை உருவாக்கி அதன்மூலம் நேரடி விற்பனையில் ஈடுபடத் தொடங்கினேன். என்னோடு மேலும் சில விவசாயிகளையும் இணைத்து பொதுமக்களுக்கு தேவையான இயற்கை விவசாய பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். வட மாநிலங்களில் பள்ளிக் குழந்தைகளை விவசாய சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதைப் பார்த்து இருக்கிறேன். அதைப்பார்த்து நாமும் ராதாபுரத்தில் விவசாய சுற்றுலாத்தலம் அமைக்கலாமே என யோசித்தேன். அதைத் தொடர்ந்து ரூ.22 லட்சம் செலவில் விவசாய சுற்றுலாத்தலம் அமைக்க முடிவெடுத்தேன்.
தற்போது எங்கள் தோட்டத்தில் 10 வகையான வாழைகள் இருக்கின்றன. ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட 42 வகையான பழ மரங்கள் உள்ளன. இதுதவிர சவுக்கு உள்ளிட்ட மர வகைகளையும் நட்டு பராமரித்து வருகிறேன். இந்த விவசாயப் பண்ணைக்கு உணவுக்காடு என்று பெயர் வைத்திருக்கிறேன்.

மேலும் விவசாய உற்பத்திப் பொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றியும் விற்பனை செய்து வருகிறேன். குறிப்பாக வாழைப்பழத்தை ‘ட்ரை ஃபுரூட்டாகவும்’ விற்பனை செய்கிறேன். இதற்காக சூரிய ஒளியில் இயங்கக் கூடிய ‘சூரிய உலர்த்தி’ கருவியை வாங்கி இருக்கிறேன். மிளகாயில் இருந்து மிளகாய்ப்பொடி, மஞ்சளில் இருந்து மஞ்சள் பொடி என மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களையும் விற்பனை செய்து வருகிறேன். அதற்கான பிரத்யேக கருவிகளும் இங்குள்ளன. காய்கறிகளைப் பொறுத்தவரை விற்பனைக்காக பயிரிடவில்லை. அதைத்செய்ய இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இங்குள்ள மரங்களுக்கும், செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சும் வேலையை ‘ரிமோட் கன்ட்ரோல் மூலம் செய்து வருகிறேன். இதனால் எனது அலுவலக வேலைகளை முடித்து விட்டு விவசாயப் பண்ணை பராமரிப்பு வேலைகளை எளிதாக செய்ய முடிகிறது. இங்கு வரும் மாணவருக்கோ அல்லது மாணவிக்கோ விவசாயத்தைப் பற்றி எந்த புரிதல் இல்லாவிட்டாலும் கூட, இங்கு வந்தபிறகு அதுகுறித்த தெளிவு கிடைக்கும் என நான் உறுதியாக கூறுவேன். இங்கு நடக்கும் வேலைகளை அவர்கள் வேடிக்கை மட்டும் பார்க்காமல், நேரடியாக களத்தில் இறங்கி செய்து பார்க்கவும் வழிவகை செய்திருக்கிறேன். இதன் மூலம் விவசாய வேலைகளின் நேரடி அனுபத்தை அவர்களுக்கு கொடுக்க முடியும். தண்ணீர் பாய்ச்சுவதிலேயே வாய்க்கால் பாசனம், சொட்டுநீர்ப் பாசனம் உள்ளிட்ட பல்வேறு முறைகளை அமைத்து உள்ளேன். விவசாய சுற்றுலாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் போக்கு நெல்லை சுற்றுவட்டார பள்ளிகளில் அதிகரிக்கவில்லை. நான் இதை ஒரு வியாபாரமாக பார்த்தால் எனக்கு வருத்தம் ஏற்பட்டு இருக்கலாம். இதை எனது தேவைக்காக செய்யும் செயலாகவே பார்க்கிறேன். இதைத் தொடர்ந்து செய்வேன்”
என்கிறார்.
தொடர்புக்கு:
அருண்குமார்: 95662 55228.

Related posts

மீஞ்சூரில் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் படத் திறப்புவிழா: அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ரூ.4620 கோடி முதலீடு மோசடி ஹிஜாவு நிறுவன நிர்வாகிகள் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு