வேளச்சேரி விஜிபி செல்வா நகரில் மாநகராட்சியின் 35 சென்ட் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற இருவர் கைது

வேளச்சேரி: வேளச்சேரியில் மாநகராட்சிக்கு சொந்தமான 35 சென்ட் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற 2 பேரை, போலீசார் கைது செய்தனர். வேளச்சேரி, விஜிபி செல்வா நகர் 2வது பிரதான சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 35 சென்ட் காலி இடம் உள்ளது. இங்கு மாநகராட்சி சார்பில் ரூ.6.97 கோடி செலவில் ஏசி வசதியுடன் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்காக கடந்த மாதம் 22ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிலையில், ஒப்பந்ததாரர் கடந்த வாரம் அந்த இடத்தை சுற்றி சவுக்கு கட்டையால் வேலி அமைத்திருந்தார். நேற்று காலை பொக்லைன் இயந்திரத்துடன் வந்த 2 பேர், இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி சவுக்கு கட்டையால் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியை இடித்து சேதப்படுத்தினர். தகவலறிந்து வந்த வேளச்சேரி போலீசார், பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுநர் சாமிகண்ணுவை (37) கைது செய்தபோது, ஆழ்வார்பேட்டையை சேர்ந்த பெர்னாண்டஸ் (82), தப்பி ஓடிவிட்டார்.

விசாரணையில், வேளச்சேரி பகுதியில் பொக்லைன் இயந்திரத்தினை சாமிக்கண்ணு நின்றிருந்தபோது, ஒருவர் வந்து அவரிடம் வேலை இருப்பதாக்கூறி அழைத்துச்சென்று, சவுக்கு கட்டையை அகற்றியது தெரியவந்தது. இதுகுறித்து தாசில்தார் சரோஜா கொடுத்த புகாரின்பேரில், அத்துமீறி நுழைதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது சொத்தை சேதம் விளைவிப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பெர்ணான்டசை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், மாநகராட்சி, அடையாறு மண்டலம், 177வது வார்டுக்கு உட்பட்ட வேளச்சேரி, விஜிபி செல்வா நகரில், 1973ம் ஆண்டு வீட்டுமனை உருவாக்கப்பட்டது. அப்போது, சமூகநலக்கூடத்திற்காக 35 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தை, ஒரு தனிநபர் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் மூலம் பட்டா வாங்கி வைத்திருந்தார். இதையறிந்த, மாநகராட்சி நிர்வாகம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வழக்கு தொடுத்தது.

இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு பட்டாவை ரத்து , மாநகராட்சி பெயரில் பட்டா வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி 2022ம் ஆண்டு, தனிநபருக்கு வழங்கிய பட்டாவை, ரத்து செய்து மாநகராட்சி பெயரில் பட்டா வழங்கப்பட்டது. இதற்கிடையில் 2016ம் ஆண்டு இந்த இடம் சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருந்தபோது, வேளச்சேரியை சேர்ந்த ராமன், விவேகானந்தன், முருகன், சுப்பிரமணி ஆகியோர் பெர்னாண்டஸ்யிடம் ரூ.1 கோடிக்கு விலை பேசி விற்றதும், இந்த இடம் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது என தெரியாமல் தனியார் இடம் என நினைத்து பெர்னாண்டஸ் சிக்கிக்கொண்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, கைது செய்யபட்ட 2 பேரையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு