வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2122.10 ஏக்கர் நிலங்களுக்கு கோயில் பெயரிலேயே பட்டா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற 2021ம் ஆண்டு மே 7ம் தேதி முதல் 2023ம் ஆண்டு மே 31ம் தேதிவரை திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.4,505 கோடி மதிப்பீட்டிலான 4,802 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. நிலவுடமைப் பதிவு மேம்பாட்டுத் திட்டத் தவறினால் பட்டா மாற்றம் செய்யப்பட்ட இனங்களில் 1771.17 ஏக்கர் நிலங்களும், கணினி சிட்டா தயாரிப்பில் தவறான இனங்களில் 2541.26 ஏக்கர் நிலங்களும் மேல்முறையீட்டின் மூலம் மீட்கப்பட்டுள்ளன. மேலும் திருக்கோயில் நிலங்களை அளவீடு செய்யும் பணிகளில் இதுவரை 1,16,886 ஏக்கர் நிலங்கள் அளவிடப்பட்டு, எல்லை கற்கள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும், சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்ற வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் நிர்வாகத்தால் தொடரப்பட்ட வழக்கில் வேதாரண்யம் வட்டம், அகஸ்தியம்பள்ளி கிராமத்தில் கட்டுப்பட்ட 2122.10 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்களுக்கு தமிழ்நாடு சிறு இனாம் (ஒழிப்பு மற்றும் இரயத்துவாரியாக மாற்றல்) சட்டம் 1963 பிரிவு 8(2)ன் படி வேதாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் பட்டா பெற முழு தகுதியுடையவராகிறார் என சென்னை உதவி நிலவரித்திட்ட (வடக்கு) அலுவலரால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்ப்பின் அடிப்படையில் இந்நிலங்களுக்கு பட்டா பெற நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியருக்கு திருக்கோயில் செயல் அலுவலரால் விண்ணப்பிக்கப்பட்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு திருக்கோயிலுக்கு சொந்தமான 2122.10 ஏக்கர் நிலங்களுக்கு திருக்கோயில் பெயரிலேயே பட்டா பெறப்பட்டுள்ளது.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்