வேடந்தாங்கல் பறவைகள் அல்ல, நாங்க வேடந்தாங்கல் சரணாலயம்: எடப்பாடிக்கு அன்புமணி பதிலடி

சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சில நாட்களுக்கு முன்பு ஓமலூரில் நடந்தது. அப்போது நிருபர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாமக கூட்டணி தொடர்பான கேள்விக்கு ‘அவர்கள் வேடந்தாங்கல் பறவை மாதிரி அடிக்கடி கூட்டணியை மாற்றுபவர்கள். வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீர் நிரம்பியிருந்தால் பறவை வரும். இல்லாவிட்டால் போய்விடும். அப்படி தான் ஒவ்வொரு தேர்தலுக்கும் பாமக கூட்டணியை மாற்றுகிறது. ராமதாஸ் மோடி ஆட்சிக்கு பூஜ்ஜியம் மார்க் கொடுத்தார். இப்போது அவரது கூட்டணியில் தான் பாமக சேர்ந்துள்ளது. சொந்த பலத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர்கள் நாங்கள். எப்போதும் கூட்டணியை நம்பி கட்சியை நடத்தவில்லை,’ என்றார்.

இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். தர்மபுரியில் நேற்று நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், ‘கடந்த 10 ஆண்டு காலம் பாமக ேதசிய ஜனநாயக கூட்டணியில் டெல்லியில் ஒரு அங்கமாக இருக்கிறது. நாம் எங்கும் செல்லவில்லை. இங்கேயே தான் இருக்கிறோம். ஆனால் ஒரு சிலர் நம்மை வேடந்தாங்கல் பறவை என்கிறார்கள். அங்கே செல்கிறோம். இங்கே செல்கிறோம் என்று விமர்சிக்கின்றனர். நாங்கள் வேடந்தாங்கல் பறவை கிடையாது. பறவைகளின் சரணாலயம்தான் வேடந்தாங்கல். நம்மிடம் வருபவர்களுக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். அவர்களுக்காக உழைப்போம். வெற்றி பெற வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம். எங்களுடைய வளர்ப்பு அப்படி,’’ என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு அன்புமணி கொடுத்துள்ள பதிலடி தேர்தல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு