செடி, கொடிகள், மரக்கன்றுகள் முளைத்துள்ளதால் வாயலூர் பாலாற்று உயர் மட்ட பாலத்திற்கு ஆபத்து..? சாலையில் கிடக்கும் மண் குவியலை அகற்ற கோரிக்கை

திருக்கழுக்குன்றம்: வாயலூர் பாலாற்று உயர் மட்ட பாலத்தில் செடி, கொடி மற்றும் மரக்கன்றுகள் முளைத்துள்ளதால் விரைவில் விரிசல் ஏற்படும் ஆபத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறது. மேலும், பாலத்தின் இருபுறமும் சாலையில் ஓரங்களில் மண், ஜல்லி கற்கள் கொட்டி கிடக்கின்றன. எனவே, பாலத்தில் விரிசல் ஏற்பட்டு பழுதாவதற்கு முன்னதாக மரக்கன்றுகள், மண் ஆகியவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னையிலிருந்து மாமல்லபுரம் – கல்பாக்கம் வழியாக புதுச்சேரி மற்றும் கன்னியாகுமரி வரை நீள்கிறது கிழக்கு கடற்கரை சாலை. போக்குவரத்துக்கு இடைஞ்சலின்றி உள்ள சாலை என்பதாலும், கடற்கரையை ஒட்டியுள்ளதால் கடற்கரை காற்றை ரசித்தபடி செல்லவும், இந்த சாலையை முக்கிய அரசியல் பிரமுகர்கள் முதல் தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால், விஐபி சாலையாகவும் இந்த சாலை விளங்கி வருகிறது.

இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கல்பாக்கம் அடுத்த வாயலூர் பாலாற்றின் நடுவே புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த பாலத்தின் ஓரத்தில் உள்ள பக்கவாட்டு சுவர் அருகே மரக்கன்றுகள் முளைத்து வருகிறது. காலப்போக்கில் இந்த மரச்செடிகள் பெரிதாக வளர்ந்தால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு பாலம் சேதமடைவதற்கு வாய்ப்புள்ளது. மேலும், வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. அதேப்போல், பாலத்தின் மீது தினமும் கல்குவாரியிலிருந்து ஜல்லி, எம்-சான்ட் எனப்படும் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிகளவில், அளவுக்கு அதிக லோடு ஏற்றி செல்கின்றன.

இதனால், காற்றின் வேகத்தில் லாரியில் ஏற்றிச் செல்லும் ஜல்லி மற்றும் எம்-சான்ட் கீழே கொட்டி அவை மண், ஜல்லி குவியலாக பாலத்தில் காட்சியளிக்கிறது. இதனால், பாலத்தின் மீது வேகமாக செல்லும் பைக் உள்ளிட்ட வாகனங்கள் இந்த மண், ஜல்லி குவியல்களில் சிக்கி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து பாலத்தின் மீது முளைத்துள்ள செடி, கொடிகள், மரக்கன்றுகளையும், மண் மற்றும் ஜல்லி குவியல்களையும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரிகளுக்கு அக்கறை இல்லை
பாலாற்று பாலத்தில் செடிகள் வளர்ந்துள்ளதையும் மண் குவியல்களையும் பற்றி சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பலமுறை சொல்லியும் பெயரளவுக்கு ஒருமுறை கூட வந்து அவைகளை அகற்றவில்லை என்று அவ்வழியே காலை நேரத்தில் நடைபயிற்சிக்கு செல்லும் பொதுமக்கள் பலமுறை செடிகளை அகற்றியும், மண் குவியலை சுத்தம் செய்தும் வருகின்றனர். பொதுமக்களுக்கு இருக்கிற அக்கரை கூட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு இல்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பொதுமக்கள் கேள்வி
கடந்த 50 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய பாலம் மிகவும் பழுதடைந்துப் போய் போக்குவரத்துக்கு லாயகற்ற பாலமாக இருந்தது. எப்போதெல்லாம் கடும் மழை பெய்து பாலாற்றில் பெருவெள்ளம் வந்தாலும், இந்த பழைய பாலம் ஆற்று வெள்ள நீரில் மூழ்கி விடும். இதனால், இந்த பாலாற்றின் குறுக்கே தரமான உயர் மட்ட பாலம் கட்டித்தர வேண்டுமென்று பொதுமக்களாகிய நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் இந்த உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. தற்போது, இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் முளைத்துள்ள செடிகளை அகற்றகவும், மணல் குவியலை சுத்தப்படுத்தவும் கூடவா போராட வேணும்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Related posts

செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடையின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: கலெக்டர் அதிரடி

போரூர் அருகே வீட்டு வாசலில் அமர்ந்து பானிபூரி சாப்பிட்ட பெண்ணுக்கு அடி-உதை: வீடியோ வைரலால் பரபரப்பு