வத்தலக்குண்டு மஞ்சளாற்றில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்திருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

*மழை காலத்திற்கு முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு மஞ்சளாற்றில் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்திருக்கும் சீமைக்கருவேல மரங்களை மழைக்காலத்தில் முன்பாக அகற்ற வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் 7 ஆயிரம் வீடுகள் உள்ளன. சுமார் 25 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். வத்தலக்குண்டுவில் உள்ளோருக்கு முக்கிய தொழில் விவசாயமாகும். நெல், வாழை உள்பட பல்வேறு விவசாயங்கள் இங்கு நடக்கிறது.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியிலுள்ள மஞ்சளாறு அணையில் இருந்து வரும் மஞ்சளாறு வத்தலக்குண்டு நடுவே புதுப்பட்டி, காமராஜபுரம், பிலீஸ்புரம், நடுத்தெரு, தெற்குத் தெருவழியாக செல்கிறது.காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளால் ஒடுங்கிப் போனது. இப்போது மஞ்சளாற்றை ஓடி வந்து ஒரே எட்டில் தாண்டிவிடலாம் ஆற்றில் வெள்ளம் வந்தால் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வேடிக்கை பார்ப்பார்கள்.

விடுமுறை நாட்களில் மாணவர்கள் ஆற்றிற்கு சென்று மீன்பிடித்து விளையாடுவார்கள். அந்த அளவுக்கு மஞ்சள் ஆறு ஊரின் அடையாளமாகவும்,பெருமையாகவும் இருந்தது. தமிழின் இரண்டாவது நாவலான வத்தலக்குண்டு ராஜா அய்யா எழுதிய கமலாம்பாள் சத்திரம் கதை மஞ்சள் ஆற்றங்கரையை சுற்றி சுற்றியேசெல்லும். மஞ்சளாற்றில் முன்பெல்லாம் தண்ணீர் சுத்தமாக கண்ணாடி போல இருக்கும். தற்போது சாக்கடை தண்ணீர் போல கருப்பு நிறமாக மாறி உள்ளது.

திருவிழா காலங்களில்சாமிகளுக்கு சக்தி கரகம் ஜோடிப்பார்கள். விநாயகர் சதுர்த்தியின் போதுவிநாயகர் ஊர்வலம் முடிந்தவுடன் மஞ்சள் நாட்டில் தான். விநாயகரை கரைப்பார்கள் தற்போது ஆற்றின் நிலையைப் பார்த்து விநாயகர்களை கண்ணாபட்டி வைகை ஆற்றில் கரைக்கின்றனர்.முளைப்பாரி ஊர் சுற்றி வந்தவுடன் மஞ்சள் ஆற்றில் கரைப்பது தான் வழக்கம் .இப்போது ஏராளமானோர் வைகை ஆற்றில் கரைத்து வருகின்றனர். தற்போது வேறு வழி இல்லாமல் மூக்கை பிடித்துக் கொண்டு சக்தி கிரகம் மட்டுமே ஜோடிக்கிறார்கள். அந்த அளவுக்கு ஆற்றின் சுற்றுப்புற சூழ்நிலை மோசமாக உள்ளது. பார்க்கும் இடமெல்லாம் சீமை கருவேல மரங்கள் தலைக்கு மேல் உயர்ந்து நிற்கின்றன. ஆற்றில் எங்கு பார்த்தாலும் புதர் மண்டிகிடக்கிறது.

சில இடங்களில் குப்பையும் குவியல் குவியலாய் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் புதர் மண்டி கிடைப்பதால் இரவு நேரங்களில் பல்வேறு சமூக விரோத செயல்கள் இங்கு நடக்கிறது. நீண்ட காலம் கழித்து வத்தலக்குண்டு வருகிறவர்கள். இங்கே ஒரு ஆறு இருந்ததே எங்கே காணோம் என்று சொல்கிற அளவுக்கு ஆறு இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறது.

ஆற்றை பராமரிக்க வேண்டிய பொதுப்பணித்துறை மஞ்சள் ஆற்றங்கரையில் தான் இருக்கிறது. ஏற்கனவே கடந்த வருடம் அங்குள்ள அதிகாரிகள் விரைவில் மஞ்சள் ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 6 அடி உயரத்திற்கு தடுப்புசுவர் எடுக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.ஆறு ஊருக்கு நடுவே இருப்பதால் புதர்மண்டி கிடக்கும் ஆற்றில் இருந்து பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் ஊருக்குள் வந்து விடுகின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும் மஞ்சளாறு சுத்தம் ,சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால்ஆற்றையொட்டிகுடியிருப்பவர்கள் கொசு தொல்லையால் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் துர்நாற்றத்தால் மூச்சி திணறி வருகின்றனர். எனவே பொதுப் பணித் துறையினர் மழைக்காலம் தொடங்கும் மஞ்சள் ஆற்றிலுள்ள புதர்களையும், கருவேல மரங்களையும் அகற்றிட வேண்டும், தடுப்புசுவர் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்துசமூக ஆர்வலர் அந்தோணிசாமி கூறுகையில், எங்கள் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் தான் மஞ்சளாறு ஓடுகிறது. நான் சிறுவனாக இருந்த போது ஆற்றை பார்த்து இருக்கிறேன். அவ்வளவு ரம்மியமாக இருக்கும். இப்போது பார்க்க சகிக்கவில்லை. அங்குகொசுக்களெல்லாம் ஈக்களை போல பெரிதாக உள்ளது. முதல்கட்டமாக சுகாதாரம் காக்க சீமைகருவேல மரங்களையும் புதர்களையும் முற்றிலும் அகற்றிட வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் அருகில் உள்ள ஆற்றை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என்றார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி