அதிமுக கூட்டணி கட்சிகளை ஒன்றிணைக்க வாசன் முயற்சியா? மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுக கூட்டணி கட்சிகளை ஒன்றிணைக்க ஜி.கே.வாசன் முயற்சி செய்து வருகிறாரா என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தரப்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இன்று சுற்று பயணத்தை தொடங்குகின்றனர். இந்நிலையில் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்நாதன், ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், பொன்னையன், வளர்மதி, செம்மலை ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் நத்தம் விஸ்வநாதன் கூறுகையில், குழுவினர் நாளை(இன்று) முதல் தமிழகம் முழுவதும் 9 மண்டலங்களில் நேரில் சென்று விவரங்களை சேகரிக்க உள்ளனர் என்றார். பொன்னையன் கூறுகையில். அனைத்து தரப்பினரும் கொரியர் அல்லது இ-மெயில் மூலமாகவும் தலைமை கழகத்திற்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், வெளிநாடு வாழ் தமிழர்களும் கூட தங்கள் கருத்துக்களை இ-மெயில் அல்லது கொரியர் மூலம் அதிமுக தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்கலாம். மக்கள் கருத்துக்களை அந்தந்த மாவட்ட ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. கருத்து தெரிவிப்பவர்கள் எழுத்துப்பூர்வமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தால் இன்னும் நலமாக இருக்கும்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜ அல்லாத மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். அதற்கான பணிகளை குழு மேற்கொண்டு வருகிறது என்றார். 2019ல் இருந்த அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தற்போது ஜி.கே.வாசன் ஒன்றிணைக்க முயற்சிப்பதாக வரும் தகவல் தொடர்பான கேள்விக்கு, பாஜ இல்லாத மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வரவேற்கப்படும் என ஜெயக்குமார் பதிலளித்தார்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை