திருவொற்றியூர்: மணலியில் உள்ள எம்.எப்.எல் ஒன்றிய அரசு நிறுவனத்தில் விவசாயத்திற்கு தேவையான உரம் தயாரிக்கப்பட்டு, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவொற்றியூர் பொது தொழிலாளர்கள் நல சங்க பொதுச் செயலாளர் பெரியசாமி, சி.ஐ.டி.யு வடசென்னை மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் நேற்று நிறுவன வாசலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பணியின்போது இறந்த தொழிலாளிக்கு பி.எப், இ.எஸ்.ஐ நலப்பயன்களை வழங்க வேண்டும், போனஸ் வழங்க வேண்டும், கேன்டீன் தொழிலாளர்களை காரணமின்றி வேலை நீக்கம் செய்ய கூடாது, மிக்ஜாம் புயலின்போது பணிபுரிந்தவர்களுக்கு 3 நாள் ஊதியம் வழங்க வேண்டும், செல்போன் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட காரணங்களை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து, எம்.எப்.எல் நிர்வாகத்திற்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.


