பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த இந்தியா – மலேசியா இடையே 8 ஒப்பந்தம் கையெழுத்து

புதுடெல்லி: இந்தியா-மலேசியா இடையேயான உறவை பலப்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவதற்காக இருநாடுகளுக்கும் இடையே நேற்று 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மலேசிய பிரதமர் அன்வர் இம்ராஹிம் மூன்று நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இரவு இந்தியா வந்தார். டெல்லி வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு பிரதமர்களும் ஆலோசனை நடத்தினார்கள்.

குறிப்பாக இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மனித கடத்தல் உள்ளிட்டவை இருநாடுகளின் கவலைக்குரிய விஷயமாக இருந்தது. இதனை தொடர்ந்து வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு துறையில் இரு நாட்டு உறவுகளை விரிவுபடுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இந்தியா -மலேசியா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், இந்திய தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இது மலேசியாவில் உள்ள இந்திய தொழிலாளர்களின் நலன்களை ஊக்குவிக்கும். இந்தியா-மலேசியா இடையேயான வர்த்தகமானது ரூபாய் மற்றும் மலேசிய நாணயமான ரிங்கிட்டில் செய்யப்படுகிறது. இருநாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பில் இன்னும் நிறைய சாத்தியங்கள் இருப்பதாக நம்புகிறோம். இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு விரிவாக்கப்பட வேண்டும். பின்டெக், பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் போன்ற புதிய தொழில்நுட்ப துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்.

இந்தியாவின் டிஜிட்டல் கட்டண முறையான யுபிஐடிய மலேசியாவின் பேநெட்டுடன் இணைக்கும் பணியும் மேற்கொள்ளப்படும். தீவிரவாதத்துக் எதிரான போராடுவது என்பதில் ஒருமனதாக இருக்கிறோம். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மலேசியா இந்தியாவின் முக்கிய கூட்டாளியாகும். கடல் மற்றும் விமான போக்குவரத்து வழித்தடங்களில் சர்வதேச சட்டங்களின்படி நடப்பதற்கு உறுதியுடன் இருக்கிறோம். அனைத்து சர்ச்சைகளுக்கும் அமைதியான முறையில் தீர்வு காண நாங்கள் ஆதரவளிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு