வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகளை பிடிக்க தீவிரம்; கேரளா, கோவாவுக்கு விரைந்தது தனிப்படை போலீஸ்..!!

விருதுநகர்: வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா, கோவாவுக்கு விரைந்துள்ளனர். விருதுநகர், அல்லம்பட்டி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் மீது வழிப்பறி, கொலை வழக்குகள் உள்ளன. இவர் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாக செயல்பட்டு வந்தார். செந்தில்குமார் தன்னை மீறி வளர நினைப்பதுடன், தனக்கு துரோகம் செய்வதாக வரிச்சியூர் செல்வம் நினைத்துள்ளார். இதன் காரணமாக இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து வரிச்சியூர் செல்வத்தை பிரிந்த செந்தில்குமார், விருதுநகரில் குடியேறினார்.

சிறிது காலம் கழித்து வரிச்சியூர் செல்வத்தை சந்தித்து சமாதானம் பேசி மீண்டும் அவருடன் சேர்ந்து கொண்டார். அதை தொடர்ந்து, 2021 மார்ச் மாதம் ஒரு சம்பவத்திற்காக மூன்று பேருடன் சென்னைக்கு செல்லுமாறு செந்தில்குமாரை வரிச்சியூர் செல்வம் அனுப்பினார். அதன்பிறகு செந்தில்குமார் திடீரென மாயமானார். இதுகுறித்து செந்தில்குமார் மனைவி முருகலட்சுமி அளித்த புகாரில் போலீசார் விசாரித்தனர். மேலும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின்படி தனிப்படை போலீசார் செந்தில்குமார் பயன்படுத்திய செல்போன் எண் அழைப்புகளை ஆய்வு செய்தனர். அதில் வரிச்சியூர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் கடைசியாக தொடர்பு கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நேற்று மதுரைக்கு சென்று வரிச்சியூர் செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், எனது தூண்டுதலின்பேரில் கூட்டாளிகள், செந்திலை சென்னையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை காரில் வைத்து திருநெல்வேலிக்கு கொண்டு வந்து, தாமிரபரணி ஆற்றில் துண்டு துண்டாக வெட்டி வீசி விட்டனர் என தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து வரிச்சியூர் செல்வத்தை சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, கொலை வழக்கில் தொடர்புடைய வரிச்சியூர் செல்வத்தின் சகோதரர் தேஜி, கூட்டாளிகள் லோகேஷ், கிருஷ்ணா தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில், வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா, கோவாவுக்கு விரைந்துள்ளனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு