வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் சிவசங்கருடன் விவாதம் நடத்த தயார்: அன்புமணி பேட்டி

சென்னை: பாமக தலைவர் அன்புமணி சென்னை தி.நகரில் நேற்று அளித்த பேட்டி: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பான விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார், அவரது அழைப்பை ஏற்று அவரோடு விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். தேதி, இடம், நேரம் ஆகியவற்றை அமைச்சர் சிவசங்கரே முடிவு செய்து அழைக்கட்டும். எப்போது அழைத்தாலும் விவாதத்திற்கு வருவதற்கு நான் தயாராக உள்ளேன். வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கொடுப்பதால் மற்ற சமூகங்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது. இது வன்னியர்கள் சார்ந்த பிரச்னை கிடையாது. தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்த பிரச்னை.

தற்போது கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்திருந்தால் எங்களுக்கு இந்த உள் ஒதுக்கீடு கேட்காமலே கிடைத்திருக்கும். தமிழ்நாட்டில் முறையாக சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தற்போது வழங்கும் 18 சதவீதத்துக்கு பதிலாக 22 சதவீதம் கிடைக்கும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உள்ளது. பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை நீதிமன்றம் ரத்து செய்யவில்லை அங்கு இடஒதுக்கீடு வரம்பு மீறியதைத்தான் ரத்து செய்து இருக்கிறார்கள். எந்தவிதமான கணக்கெடுப்பும் நடத்தாமல் எம்பிசிக்கு 20 சதவீத ஒதுக்கீடு கொடுக்க முடியுமானால் வன்னியர்களுக்கும் உள் ஒதுக்கீடு கொடுக்க முடியும். சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மீண்டும் தமிழக முதலமைச்சரை சந்திப்பேன். சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இதற்காக போராட்டம் நடத்துவோம் என்றார்.

Related posts

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது

தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது