வன்ம அரசியல்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 8 ஆயிரம் விருந்தினர்கள் பங்கேற்றனர். ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை வரவேற்கின்றனர். அதற்காக ராமரை வைத்து அரசியல் நடத்தும் பாஜவின் செயல்பாடுகளை பெரும்பாலான இந்து மக்கள் எதிர்க்கின்றனர். பல மாநிலங்களில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. ஒன்றிய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

ஒன்றிய கல்வி நிறுவனங்களான ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அதன் பள்ளிகள், புதுச்சேரி, டெல்லி பல்கலைக்கழகம் மூடல், தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை ஆகியவை அன்றைய தினத்தில் வர்த்தகத்தில் ஈடுபடாது போன்ற அறிவிப்புகள் வெளியாயின. இதற்கும் ஒருபடி மேல சென்று எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற முக்கிய மருத்துவமனைகள் மூடல் போன்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து எய்ம்ஸ் தனது அறிவிப்பை திரும்ப பெற்றது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட போதும், அவசர சிகிச்சைகள் வழக்கம் போல வழங்கப்படும். திட்டமிடப்பட்ட பரிசோதனைகள் நடத்தப்படும், என சென்னை ஐகோர்ட்டில் ஜிப்மர் நிர்வாகம் உத்தரவாதம் அளித்ததால் பிரச்னை முடிவுக்கு வந்தது.

ராமர் கோயில் கும்பாபிஷேம் என்பதை பிரபல கோயில் கும்பாபிஷேகமாக பார்க்க வேண்டும். அதற்காக இந்தியா முழுவதும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை விடும் அளவுக்கு சென்றிருக்கக்கூடாது என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். நேற்றைய விடுமுறையால் பங்கு சந்தை, வங்கிகள் மூலம் பல கோடி வர்த்தகம் பாதிப்பு அடைந்தது. பொதுதேர்வுக்கு 40 நாட்கள் உள்ள நிலையில் விடுமுறை என்பது மாணவர்களுக்கு பெரும் சுமையாக மாறியது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மத்தியில் பாஜ ஆட்சியமைக்க வேண்டும் என்பதால் ராமர் கோயிலின் திருப்பணிகள் அவசர அவசரமாக நடந்தது.

சில பணிகள் முழுமையாக முடியவில்லை என சில சங்கராச்சாரியார்கள் கருத்து தெரிவித்தனர். முழுக்க முழுக்க நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்து கும்பாபிஷேக பணிகள் நடந்ததாக பலரும் குற்றசாட்டினர். தேர்தலுக்காக ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவதாக வெளிநாட்டு பிரபல நாளிதழ்கள் கருத்து தெரிவித்துள்ளன. மோடி, 3வது முறையாக அதிகாரத்துக்கு வர முயற்சி செய்கிறார் என்கிறது வாஷிங்டன் டைம்ஸ். இதுபோன்று தி பைனான்சியல் டைம்ஸ் உள்பட வெளிநாட்டு ஊடகங்கள் அரசியலுக்காக என கருத்து கூறியுள்ளது. திமுக அரசு, குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க தவறிவிட்டது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அயோத்தி நிகழ்ச்சியை காண வைக்கப்பட்ட எல்இடி திரைகள் அகற்றப்பட்டதாக ஒன்றிய அரசில் பொறுப்பில் உள்ளவர் கூறியிருப்பது பெரும் அபத்தமானது. ஏன் எனில் எல்இடி திரைகள் வைப்பதற்காக இந்து அமைப்புகளே அனுமதி கோரவில்லையாம். உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் விஷமத்தை விதைக்கக்கூடாது. கோயிலின் பூசாரிகள், ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம், மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்ததாக தமிழக கவர்னர் கூறியிருப்பது வெறுப்பு அரசியலை காட்டுகிறது. கவர்னரின் கூற்றை அர்ச்சகரே மறுத்திருக்கிறார். சமூக நல்லிணக்கத்துடன் வாழும் தமிழகத்தில் ராமரை வைத்து வன்ம அரசியல் செய்வது எந்த காலத்திலும் நடக்காது.

Related posts

குமாரபாளையம் ஏடிஎம் கொள்ளை: காவல்துறை விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்கள்!

ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல்!

கோவையில் கல்லூரி மாணவர்கள் அறையில் சோதனை