100 கி.மீ தூரத்திற்கும் குறைவான நகரங்களை இணைக்கும் வகையில் 2024 பிப்ரவரியில் ‘வந்தே மெட்ரோ’ ரயில்கள் வருகிறது: அடுத்த இலக்கை நோக்கி பயணிக்கும் இந்திய ரயில்வே வாரியம்

புதுடெல்லி: 100 கி.மீ தூரத்திற்கும் குறைவான நகரங்களை இணைக்கும் வகையில் வரும் 2024 பிப்ரவரில் ‘வந்தே மெட்ரோ’ ரயில்களை இயக்க இந்திய ரயில்வே வாரியம் இலக்கு நிர்ணயம் செய்து செயல்பட்டு வருகிறது. டெல்லி, லக்னோ, மொராதாபாத், பாட்னா, ராஞ்சி, ஜெய்ப்பூர், போபால், அகமதாபாத், சென்னை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. டெல்லி மெட்ரோவின் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைனின் (ஏஇஎல்) வேகம் சமீபத்தில் மணிக்கு 90 கிமீ முதல் 100 கிமீ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள நம்ம மெட்ரோவின் சராசரி வேகம் மணிக்கு 80 கி.மீ. மும்பை மெட்ரோ ரயில்களின் வேகம் மணிக்கு 65 கிமீ வேகத்தில் இருந்து 80 கிமீ ஆக உயர்த்தப்பட்டது. கொல்கத்தா மெட்ரோ ரயில்களின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ. இருப்பினும், கொல்கத்தா மெட்ரோவின் சில வழித்தடங்களில் வேக வரம்பு கட்டுப்பாடுகளும் நடைமுறையில் உள்ளன.

தற்போது நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், அதிகபட்சமாக 180 கி. மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில், ‘வந்தே பாரத்’ ரயில்கள் வடிவமைக்கப்பட்டாலும் அதன் அதிகபட்ச வேகம் 130 கி.மீட்டராக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2019 பிப்ரவரியில் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. தற்போது 25 வழித்தடங்களில் 50 ரயில்கள் இயங்குகின்றன. இந்த மாத இறுதிக்குள் இன்னும் 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது பல வந்தே பாரத் ரயில்கள் 8 பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்பட்டாலும், அதிலும் பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது.

பெரிய நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் ரயில்களை போன்று, தற்போது 100 கி.மீ தூர இடைவெளியில் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ஆண்டு டிசம்பரில் ‘வந்தே மெட்ரோ’ ரயிலை இயக்க இந்திய ரயில்வே வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே மூத்த அதிகாரிகள் கூறுகையில்:
சில தொழில்நுட்ப காரணங்களால் ‘வந்தே மெட்ரோ’ ரயில்கள் இயக்குவதற்கு தாமதமானாலும் கூட, நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில்கள் அடுத்தாண்டு பிப்ரவரியில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ‘வந்தே மெட்ரோ’ ரயில்களானது செமி-சூப்பர் பாஸ்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் அடுத்த தயாரிப்பாகும். அதன் வடிவமைப்பு இம்மாதம் நிறைவடையும். இதன் பிறகு, ரயிலின் பெட்டியின் உட்புறம்-வெளிப்புற வடிவமைப்பை உருவாக்கும் பணி செப்டம்பர் மாதம் தொடங்கப்படும். இந்த ரயிலின் சோதனை ஓட்டம் ஜனவரியில் தொடங்கப்படும்.
ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சான்றிதழைப் பெற்ற பிறகு, முதல் வந்தே மெட்ரோ ரயிலின் இயக்கம் பிப்ரவரியில் தொடங்கும்.

முக்கிய நகரங்களுக்கு இடையே 100 கி.மீ தூரத்திற்கும் குறைவான நகரங்களை இணைக்கும். இந்த ரயில்கள் ஒரு நாளில் நான்கு முதல் ஐந்து டிரிப்புகள் செல்லும். வந்தே மெட்ரோ ரயிலின் கதவுகள் தானாகவே திறந்து மூடப்படும். இதில், தற்போது இயக்கப்பட்டு வரும் ‘வந்தே பாரத்’ ரயில்களை போன்று அனைத்து வசதிகளும் கிடைக்கும். ஆனால் கழிப்பறை வசதி இல்லை. வந்தே மெட்ரோவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 முதல் 160 கிலோமீட்டர் வரை இருக்கும். மற்ற பயணிகள் ரயில்களுடன் ஒப்பிடும்போது, ​​வந்தே மெட்ரோ ரயிலின் சராசரி வேகம் அதிகமாக இருக்கும்.

இதனால் குறைந்த நேரத்தில் பயணத்தை முடிக்க முடியும். வந்தே மெட்ரோ ரயில்கள் எட்டு பெட்டிகள் கொண்டதாக இருக்கும். ெபாதுவாக பயணிகள் ரயில்கள் வந்து நிற்க அதிக நேரம் எடுக்கும். ஆனால் வந்தே ெமட்ரோ ரயில்கள், தானியங்கி முறையில் இயக்கப்படும். ஒவ்வொரு மூன்று பெட்டிகளுக்கும் இடையில் நான்கு இன்ஜின்களை கொண்டது. இதனால் ரயில்கள் அதிவேகமாக இயக்கப்பட்டு நின்று செல்லும். இதன் காரணமாக அதன் சராசரி வேகம் அதிகரிக்கும். வந்தே மெட்ரோ ரயிலின் முதல் பயணம், ஒடிசா மாநிலம் பூரி – புவனேஸ்வர் – கட்டாக் இடையே இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்றனர்.

Related posts

ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் கூடுதல் கோதுமை வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி பேட்டி

இயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது..! ஈஷா காய்கறி திருவிழாவில் திமுக எம்.பி பேச்சு!

மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மெல்ல மெல்ல சீரடைகிறது