மீஞ்சூர் -வண்டலூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 12 கல்லூரி மாணவர்கள்: போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்

பொன்னேரி: செங்குன்றம் காவல் சரகம் மீஞ்சூர் -வண்டலூர் வெளிவட்ட சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 12 கல்லூரி மாணவர்களை பிடித்து மீஞ்சூர் போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் செங்குன்றம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலையில் தினமும் 24 மணி நேரமும் மீஞ்சூர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை மீஞ்சூர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வம் மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆறு விலை உயர்ந்த பைக்குகளில் 12 வாலிபர்கள் அதிக வேகத்தில் வந்தனர். அப்போது அவர்களை மடக்கி விசாரணை செய்ததில் சென்னை பெரம்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என தெரிய வந்தது. அவர்களிடம் விசாரித்ததில் பைக் ரேசில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களை பிடித்துவைத்த போலீசார், அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து பெற்றோர்களை வரவழைத்தனர். பின்னர் பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு அறிவுரை கூறியும், ஜாலிக்காக பைக் ரேசில் ஈடுபட்டு வாழ்க்கையை இழந்தவர்கள் பற்றியும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பிறகு பைக் ரேசில் ஈடுபடமாட்டோம் என்று எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related posts

மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

அருவியில் நண்பர்களுடன் குளித்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மருத்துவ மாணவர்கள் பலி: 2 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை

தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் கிடந்ததால் ராணுவ சிறப்பு ரயில் நிறுத்தம்: ரயில்வே ஊழியர் கைது