வஞ்சிக்கும் ஒன்றிய அரசு

நூறு நாள் திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதமாக ஒன்றிய அரசு சம்பளம் வழங்காததால் பல்வேறு மாநிலங்களிலும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை வருவதால் தொழிலாளர்களை வஞ்சிக்காமல் ஒன்றிய அரசு நிதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் வறட்சி, கிராமப்புற துயரங்கள் மற்றும் பொதுமக்களின் வேலையின்மை ஆகியவற்றை தீர்க்க ஒரு முக்கியமானதாக உள்ளது. தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற திட்டமாக விளங்குகிறது. 2008ல் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, ​​பொருளாதார மந்த நிலையை இந்தியா சமாளிக்க உதவியது. கிராமப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது என்பதால் சந்தைகள் மந்தநிலையை சந்திக்கவில்லை.
கோவிட் தொற்றுநோய் பாதிப்பின்போது சொந்த ஊரை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்தனர். இருப்பினும், ​​​​இந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் வீடு திரும்பிய கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு உயிர்நாடியாக மாறியது.

இந்த வேலைகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை ஒன்றிய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் கூடுதலாக ரூ.7 முதல் ரூ.26 வரை ஊதியம் உயர்த்தியது. குறைந்த அளவே ஊதியம் உயர்த்தியதாக பாஜ கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் மாநிலங்களுக்கு மாநிலம் ஊதிய உயர்வு வேறுபடுகிறது. ராஜஸ்தானில் ரூ.231ல் இருந்து ரூ.255 ஆகவும், பீகார், ஜார்க்கண்டில் ரூ.210ல் இருந்து ரூ.228 ஆகவும், சட்டீஸ்கர், மத்திய பிரதேசத்தில் ரூ.204ல் இருந்து ரூ.221 ஆகவும் தினசரி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2023-24ம் நிதி ஆண்டுக்கு ஊதியம் ரூ.294 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இது 4.63 சதவீத உயர்வு ஆகும். 100 நாள் வேலை திட்டத்தில், கிராம சபைகள் மூலம் சமூக தணிக்கை செய்வது அவசியம் ஆகும். ஊழலை களைவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் சுயேச்சையான சமூக தணிக்கை குழு வைத்துள்ளது. அதற்கான நிதியை ஒன்றிய அரசே வழங்கி வருகிறது. ஆனால், சமீபகாலமாக இந்த நிதியை வழங்குவதில் ஒன்றிய அரசு தேவையற்ற கால தாமதம் செய்கிறது. இதனால், சமூக தணிக்கைகள் உரிய நேரத்தில் நடப்பது இல்லை. இதை காரணம்காட்டி, மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க மறுக்கிறது. இதனால், சமூக தணிக்கை பணி மட்டுமின்றி, தொழிலாளர்களுக்கு சம்பள பட்டுவாடா செய்வதும் பாதிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தை சக்கர வியூகத்தில் சிக்க வைத்து, எதிர்கட்சிகள் ஆளும் தமிழகம், மேற்குவங்கம் உள்பட 15

மாநிலங்களில் நிதியை நிறுத்தி உள்ளது. நூறு நாள் வேலைத்திட்ட நிதியை ஒன்றிய அரசு முடக்கி வைத்துள்ளதால் டெல்லிக்கு படையெடுப்போம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்தார். நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனால் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். முக்கிய பண்டிகையான தீபாவளியை கொண்டாடும் நேரத்தில் தொழிலாளர்களை வஞ்சிக்காமல் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி அவர்களது வாழ்வில் தீபஒளியை ஏற்ற வேண்டும்.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி