வேன் ஏற்றி மாணவியை கொலை செய்த வழக்கு: உறவினர்கள் உட்பட 4 பேரிடம் போலீஸ் விசாரணை

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகர் பகுதியில் சேர்ந்தவர் சுபாஷ் (24). இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்த சந்திரன் மகள் மஞ்சுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது காதல் திருமணத்திற்கு மஞ்சுவின் பெற்றோர் சந்திரன் மற்றும் சித்ரா எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சுபாஷின் குடும்பத்திற்கு அடிக்கடி மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சுபாஷ் தனது தங்கை ஹாசினியை (16) சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு கொண்டு சென்று விடுவதற்காக ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அப்போது மஞ்சுவின் தந்தையான சந்திரன் சத்தியமங்கலம் – மேட்டுப்பாளையம் சாலையில் எரங்காட்டூர் நெசவாளர் காலனி அருகே சுபாஷ் ஸ்கூட்டர் மீது பிக்கப் வேனை அதிவேகமாக இயக்கி பின்பக்கமாக மோதினார். இந்த விபத்தில் ஹாசினி பலத்த காயம் அடைந்தார். சுபாஷூக்கு காலில் காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்து சந்திரன், அவரது மனைவி சித்ராவின் ஸ்கூட்டரில் ஏறி தப்பியோடி இருவரும் தலைமறைவாகினர். பலத்த காயமடைந்த ஹாசினியை கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று மாணவி உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து ஈரோடு எஸ்பி., ஜவகர் உத்தரவின்பேரில், சத்தியமங்கலம் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே புதுமந்து பகுதியில் பதுங்கி இருந்த சந்திரன் மற்றும் சித்ரா ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போலீசார் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், நேற்று மதியம் ஹாசினியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவர் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு எதிர்ப்பு காரணமாக இந்த பிரச்சனை கொலையில் முடிவடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சந்திரன்-சித்ரா தம்பதிக்கு உதவிய உறவினர்கள் 3 பேர் மற்றும் ஊட்டிக்கு ஜீப்பில் அழைத்து சென்ற டிரைவர் உட்பட 4 பேரை பவானிசாகர் போலீசார் நேற்று இரவு பிடித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு