வால்பாறையில் ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள்-நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

வால்பாறை : வால்பாறை நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி செல்வம் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் பாலு முன்னிலை வகித்தார். வால்பாறை பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்தனர். கவுன்சிலர் செல்வக்குமார் பேசுகையில், ‘108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதிக்கு வழங்கிய தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தார். அவசர தேவைக்கு வால்பாறையில் இருந்து ஆம்புலன்ஸ் வாட்டர்பால்ஸ், அட்டகட்டி உள்ளிட்ட 1-வது வார்டு பகுதிக்கு செல்ல 1 மணி நேரம் பிடித்த நிலையில், தற்போது ஆம்புலன்ஸ் வழங்கியதால் உயிர் காக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கவுன்சிலர் இந்துமதி பேசுகையில், ‘சோலையார் அணை பகுதியில் தண்ணீர் தொட்டி கட்டும் பணி முடிவுற்ற நிலையில், குடியிருப்பு பகுதிக்கு கிடைக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும், கோவில் திருவிழாக்கள் நடைபெறும் நிலையில் தண்ணீர் தேவை உள்ளது’ என்றார்.

கவுன்சிலர் வீரமணி பேசுகையில், ‘ரொட்டிக்கடை பகுதியில் தண்ணீர் தொட்டி பணிகள் முடிவுற்ற நிலையில், விநியோகத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரேசன் கடை, சமூக நலக்கூட பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தெருவிளக்கு பல்புகளை கூடுதல் வெளிச்சம் கிடைக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும், அம்பேத்கர் சிலைக்கு அரசு அனுமதி அளிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

கவுன்சிலர் அன்பரசு பேசுகையில், ‘நகராட்சிக்கு முன் நிழற்குடை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை காலம் தொடங்கிவிட்ட நிலையில், எதிர்வரும் நாட்களில் பள்ளி மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.கவுன்சிலர் மகுடீஸ்வரன் பேசுகையில். ‘குரங்குமுடி, முருகன் எஸ்டேட், செங்குத்துப்பாறை, மாணிக்காபழைய காடு பகுதி நிழற்குடைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், சீரமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கவுன்சிலர் ஜே.பி.ஆர்.பாஸ்கர் பேசுகையில், ‘ஸ்டான்மோர் எம்ஜிஆர் நகர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே தண்ணீர் தொட்டியை பெரிதாக மாற்றியமைக்க வேண்டும். கோடை விழா நடத்துவது குறித்து கடந்த கூட்டத்தில் கேட்டிருந்தேன். நகராட்சியால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும், கோடை விழா நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

கவுன்சிலர் மணிகண்டன் பேசுகையில், ‘முடீஸ் பகுதியில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பணிகளை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சாலை பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் கல்வெட்டு வைக்க உத்தரவிட வேண்டும் என்றார். அனைத்து கவுன்சிலர்களும், 21 வார்டு பகுதியிலும் தெரு விளக்குகள் எரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும், வனவிலங்கு தொல்லை கூடுதலாகி வரும் நிலையில், கூடுதல் தெரு விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தினர். மேலும் தெருவிளக்குகள் பகலில் எரிவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கேள்விகளுக்கு பதில் அளித்த நகராட்சி தலைவர் புதிய கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.கழிவுநீர் கால்வாய், தடுப்பு சுவர், படிக்கட்டு, சாலை, மயான கூரை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், நகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர். துணை தலைவர் செந்தில் நன்றி தெரிவித்தார்.

நகராட்சி ஆணையாளருக்கு பிரியாவிடை

வால்பாறை நகராட்சி ஆணையாளர் பாலு பதவி உயர்வு பெற்று கோவையில் உள்ள நகராட்சிகளின் பயிற்சி மைய துணை இயக்குநராக பொறுப்பேற்கிறார். எனவே கூட்டத்தில் அவருக்கு கவுன்சிலர்கள் சால்வை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் பிரியாவிடை கொடுத்தனர். வால்பாறை நகராட்சி பொறியாளர் வெங்கடாச்சலம் நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார்.

Related posts

கலைஞர் பற்றி அவதூறு: சீமான் மீது புகார்

“என்னை காண ஆதாருடன் வரவும்”- கங்கனா நிபந்தனை

இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது