வக்பு வாரிய சட்ட திருத்தம் பாஜவின் இந்துராஷ்டரா செயல்திட்டம்: வைகோ கண்டனம்

சென்னை: வக்பு வாரிய சட்டத் திருத்தம், பாஜவின் இந்துராஷ்டரா செயல்திட்டம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இஸ்லாமியரின் மத உரிமை, வக்பு சொத்துகளை அபகரித்து பறிக்கும் நோக்கத்துடன் வக்பு சட்டம் 1995 (திருத்தம்) என்ற பெயரிலான மசோதாவை தாக்கல் செய்துள்ளது மோடி அரசு. இத்திருத்தங்கள் மூலம் நாடு முழுவதிலும் வக்பு வாரியத்துக்கு சொந்தமான 7,85,934 சொத்துகளைப் பறிமுதல் செய்து விருப்பம் போல் பயன்படுத்த பாஜ அரசு முனைந்து இருக்கிறது.

வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தவர் மற்றும் பெண்களை உறுப்பினர்களாக நியமிக்க இச்சட்டத் திருத்தம் வழி செய்கிறது. வக்பு வாரியத்திற்கும் அரசுக்கும் அல்லது தனி நபர்களுக்கும் இடையிலான சொத்து விவகாரத்தில் முடிவினை கூறக்கூடிய உரிமையை மாவட்ட ஆட்சியருக்கு அளித்ததில் இருந்து வக்பு வாரிய சொத்துகள் இனி இஸ்லாமியரிடமிருந்து பறிக்கப்படுவதற்கான சட்டப்பூர்வமான வேலையை அரசு தொடங்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்துத்துவக் கும்பலின் இஸ்லாமிய வெறுப்பு, இந்து ராஷ்டிரிய கனவும் தகர்க்கப்பட்டே ஆக வேண்டும். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இருவரும், நாட்டின் பன்முகத்தன்மையை ஒழித்துக்கட்டும் பாஜகவின் முயற்சிக்கு துணை போகக்கூடாது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் ஏ.முஜீபுர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கை: வக்பு வாரிய சட்டத்தை திருத்தும் மசோதாவை தாக்கல் செய்தவுடனே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் இதை கடுமையாக எதிர்த்துள்ளன. இதுவரை பாஜ அரசு கொண்டு வந்த எந்த மசோதாக்களிலும் எவ்வித நன்மையையும் காணாத இந்தியா, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிலும் எந்த நன்மையையும் காணப்போவதில்லை. தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை:

மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்து விட்டு, அம்மசோதாவை விரிவாக ஆராய்வதற்காக தேர்வுக் குழுவும் அனுப்புவதாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்திருப்பது என்பது ஜனநாயகவாதிகளை ஏமாற்றும் சூழ்ச்சியே.  எனவே அரசியலமைப்புக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான வக்பு திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெறுவதே ஒரே வழி. இல்லையெனில் அது நாட்டின் இறையாண்மையை சிதைத்து விடும்.

இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் நோக்கில்தான் வக்பு மசோதாவை கொண்டு வந்துள்ளது பாஜ அரசு. இஸ்லாமியர்களுக்கு உரிமையுள்ள, அவர்களுக்கு மட்டுமே சொந்தமான இந்த சொத்துகளை நிர்வகிப்பதற்கு முஸ்லிம் அல்லாதோரை நியமிப்பது அநியாயத்தின் உச்சமில்லையா? இது போன்ற பல உரிமை மீறல்களை இம்மசோதாவின் மூலம் அரங்கேற்றியுள்ள பாஜ அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 

Related posts

மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு

கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்துறை 545 விருதுகள் பெற்று சாதனை: தமிழக அரசு

வங்கதேச அணிக்கு 515 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி