வைக்கோலுக்கான பயணம் விவசாயி ஆக்கியிருக்கிறது! :நெகிழ்கிறார் நாகர்கோவில் உழவர்

நாகர்கோவில் அருகே உள்ள சொத்தவிளையை அடுத்த இலந்தைவிளையை சேர்ந்தவர் ராஜப்பன். மாடு வளர்ப்பில் ஈடுபட்ட இவர் அருகில் உள்ள பறக்கை கிராமத்தில் குத்தகை முறையில் நெல் சாகுபடி செய்து, மாடுகளுக்கு வைக்கோல் பெற்றுக்கொள்வதோடு, நெல் மூலமும் ஒரு குறிப்பிட்ட வருமானம் பார்த்து வருகிறார். அவரை ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம்.

`எனக்கு சொந்தமாக வயல் எதுவும் கிடையாது. ஆனால் பசுமாடுகளை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். இதனால் 5 பசுமாடுகளை வளர்த்து வருகிறேன். பசுக்களுக்கு தீவனமாக புற்கள், வைக்கோல், புண்ணாக்கு போன்றவற்றை வழங்கி வருகிறேன். பசுந்தீவனத்திற்காக பறக்கை, தெங்கம்புதூர் பகுதிகளுக்கு செல்வது வழக்கம். பறக்கை பகுதியில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் ெநல்வயல்கள் உள்ளன. இங்கு அறுவடைக் காலங்களில் விவசாயிகளிடம் இருந்து வைக்கோல்களை விலைக்கு வாங்குவேன். 6 மாதத்திற்கு 110 கட்டு வைக்கோல் வாங்குவேன். ஒரு கட்டு வைக்கோல் ரூ.250 என விலை கொடுத்து வாங்குவேன். வைக்கோலுக்கு என 6 மாதத்திற்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகும்.

அப்போது பறக்கையில் விவசாயம் செய்யும் ரவீந்திரன் என்ற விவசாயி என்னிடம், நீ சொந்தமாக விவசாயம் செய்தால் நீ வளர்க்கும் மாடுகளுக்கு தீவனமாக வைக்கோல் கிடைக்கும் என தெரிவித்தார். அவர் கூறியபோது எனக்கு தயக்கமாக இருந்தது. நாம் பசுமாடுகளை மட்டுமே வளர்த்து வருகிறோம். விவசாயத்தில் நமக்கு அனுபவம் இல்லையே என கருதினேன். அப்போது அவர் நீ விவசாயம் செய்? உனக்கு விவசாயம் சார்ந்த ஆலோசனைகளை தருகிறேன் என கூறினார். அவர் ெகாடுத்த ஊக்கத்தில் நெல் விவசாயம் செய்ய முடிவு செய்தேன். அதன்படி பறக்கையில் 2 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலத்ைதக் குத்தகைக்கு எடுத்து கடந்த 5 வருடமாக நெல் விவசாயம் செய்து வருகிறேன்.
கன்னிப்பூ பட்டத்தின்போது அம்பை 16 ரக நெல்லையும், கும்பப்பூவின்போது திருப்பதிசாரம் 3 ரக நெல்லையும் சாகுபடி செய்து வருகிறேன். சாகுபடி செய்யும்போது அடி உரமாக டிஏபி, யூரியா போடுவேன். பின்னர் 20 நாட்கள் கடந்த பிறகு பொட்டாஷ், பாக்டம்பாஸ், யூரியா ஆகியவற்றை இடுவேன். நெற்பயிரில் இருந்து கதிர்கள் வருவதற்கு முன்பு பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், யூரியா ஆகிய உரங்களைப் போடுவேன். இந்த உரங்களை வேளாண்மைத் துறை அதிகாரிகள் பரிந்துரைக்கும் அளவில் கொடுப்பேன்.

பாசனம் செய்தால் ஓரிரு நாட்களில் வயல்களில் தண்ணீர் வற்றிவிடும். அதன்பிறகு இரண்டு நாட்கள் காயப்போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இப்படி தண்ணீர் கொடுக்கும்போது நெற்பயிர்கள் நன்றாக வளர்வதுடன், அதிக மகசூலும் கொடுக்கும். தற்போது நெற்பயிர் சாகுபடி செய்து வருவதால், கடந்த 5 வருடமாக பசுக்களுக்கு தேவையான வைக்கோல் எளிதாக கிடைத்து விடுகிறது. இதனைத் தவிர நெல்லும் கிடைக்கிறது. வீட்டிற்குத் தேவையான அளவு நெல்லை வைத்துவிட்டு மீதி நெல்லை விற்பனை செய்து வருகிறேன். நெல் சாகுபடி செய்யும்போது, வயலைச் சுற்றி வரப்பு வெட்டுதல் உள்ளிட்ட வேலைகளை நானே செய்வேன். அதுபோல் தண்ணீர் விடுவது, உரம் போடுவது என அனைத்து வேலைகளையும் நானே செய்து விடுவேன். இதனால் வேலைக்கு ஆட்கள் அமர்த்துவது, அவர்களுக்கு சம்பளம் கொடுப்பது எனக்கு மிச்சமாகிறது. அறுவடை முடிந்து வயல் உரிமையாளர்களுக்கு குத்தகைப் பணத்தைக் கொடுத்தது போக அனைத்து செலவையும் கழித்து, கன்னிப்பூ அறுவடையின்போது ரூ.30 ஆயிரம் லாபமாக கிடைக்கும். இதுபோல் கும்பப்பூ அறுவடையின்போது ரூ.15 ஆயிரம் லாபம் கிடைக்கும். கும்பப்பூ சாகுபடியின்போது பூச்சித் தாக்குதல் அதிகம் இருக்கும். அறுவடையின்போது மகசூல் குறைவாக கிடைக்கும். ஆனால் கன்னிப்பூ சாகுபடியின்போது காலநிலை சாதகமாக இருப்பதால், மகசூல் கூடுதலாக கிடைக்கிறது’’ என்கிறார்.
தொடர்புக்கு:
ராஜப்பன்: 80563 60142.

கதிரைப் பார்த்து மேனி கணக்கீடு

குமரி மாவட்டத்தில் ஒரு ஏக்கர் வயலில் 21 கோட்டை நெல் அறுவடை செய்தால் ஒரு மேனி கிடைத்திருக்கிறது என விவசாயிகள் கூறுவார்கள். ஒரு கோட்டை என்பது 87 கிலோ எடை. இதுபோல் அதிக மகசூல் கிடைக்கும்போது ஒன்றரை மேனி, இரண்டு மேனி, 3 மேனி என கூறுவார்கள். மேனிகள் அதிகமாகும்போது விவசாயிகளுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். ஆனால் வயல் அறுவடை தொடங்குவதற்கு முன்பே வயலில் உள்ள நெற் கதிர்களைப் பார்த்து இத்தனை மேனி கிடைக்கும் என விவசாயிகள் கணித்து விடுவார்கள்.இதை எப்படி கணிக்கிறீர்கள்? என ராஜப்பனிடம் கேட்டோம். “ அறுவடை செய்வதற்கு முன்பு நெற்பயிரில் இருந்து வந்த ஒரு நெற்கதிரை எடுத்து, அதில் உள்ள நெல்மணிகளை எண்ண வேண்டும். அந்த கதிரில் 105 நெல் மணிகள் இருந்தால் ஒரு மேனி எனவும், கதிரில் 160 நெல் மணிகள் இருந்தால் ஒன்றரை மேனி எனவும், 210 நெல் மணிகள் இருந்தால் இரண்டு மேனி எனவும், அதற்கு மேல் இருந்தால் நெல்மணிகளை வைத்து எத்தனை மேனி கிடைக்கும் எனவும் தெரிந்து கொள்ளலாம்’’ என விளக்கினார்.

 

Related posts

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை

எரிபொருள் டேங்கர் – லாரி மோதி விபத்து; நைஜீரியாவில் 48 பேர் தீயில் கருகி பலி: 50 மாடுகளும் எரிந்து கருகியது