வளம் தரும் வைகாசிப் பட்டம்!

விவசாயம் என்பதே காலநிலையைச் சார்ந்துதான் இருக்கிறது. எந்தப் பயிராக இருந்தாலும் பட்டம் பார்த்து விதைத்தால்தான் பலன் பெற முடியும். அந்தப் பயிருக்கு உகந்த தட்பவெப்பம் கிடைக்கும். நம் முன்னோர்கள் சொர்ணவாரி, சம்பா, பின்சம்பா, நவரை, குறுவை என்று பட்டத்தைப் பிரித்து பயிர் செய்தார்கள். தை, மாசி, பங்குனி மாதங்கள் அறுவடை காலமாக இருக்கின்றன. சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். இதனால் கோடை வெப்பம் காரணமாக பயிர் சாகுபடி செய்வதில் சிரமம் இருக்கும். புதிதாக பயிர் சாகுபடி செய்தாலும் அதிக சூட்டின் காரணத்தால் பயிர்கள் கருகி விடும். வைகாசி மாதம் துவங்கியதும் காற்று பலமாக வீசத் துவங்கும். இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவும். இந்த சீசனில் பயிர் சாகுபடி செய்தால் நடவு செய்யப்படும் பயிர்கள் அனைத்துமே வேர்பிடித்து நன்கு வளரும். இதனால் சித்திரை, வைகாசியில் செடிமுருங்கை, கத்தரி, பூசணி, தக்காளி, மிளகாய், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தால் நல்லது.

மரங்களில் வளராமல் செடிகளில் வளர்வதுதான் செடிமுருங்கை. இதை விதைத்த 4 அல்லது 5 மாதங்களில் காய்க்கத் தொடங்குவதால் விரைவில் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும். அதேபோல் ஒருமுறை விதைத்தால் மூன்று ஆண்டுகள் வரை காய்த்து விவசாயிகளுக்கு பலன் கொடுக்கும். செடிமுருங்கையை முறையாக சாகுபடி செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம். இந்தப் பட்டத்தில் நாட்டுகத்தரி, எம்ஹெச் 9, எம்ஹெச் 11, அப்சரா, என்.எஸ். 1720, ரவையா, பச்சைநீலம் போன்ற வீரிய ரகங்களையும் நடவு செய்யலாம். பொதுவாக ரகத்தின் தன்மைக்கு தகுந்தபடி இடைவெளி மற்றும் செடியின் எண்ணிக்கை மாறுபடும். 8 முதல் 12 மணி நேரம் உயர்பாத்திகளை சொட்டுநீர்ப் பாசனத்தை பயன்படுத்தி ஊற வைத்து நடவு செய்ய வேண்டும். கத்தரியைப் பொருத்தவரையில் 50 முதல் 120 நாட்கள் வரை நல்ல மகசூல் கிடைக்கும். பயிரிடும் விதை தரமானதாக இருந்தால் அதிக மகசூல் கிடைக்கும். விதையின்

தரத்தைப் பரிசோதிக்க அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு விதைப் பரிசோதனை நிலையங்களில் விதைகளைக் கொடுத்து அதன் தரத்தை அறிந்தபின் விதைப்பது நல்லது.வைகாசிப் பட்டத்திற்கு மிகவும் ஏற்ற மற்றொரு பயிர் பூசணி. இதன் விதைகளை விதைக்கும் முன் குழிகளுக்கு நீர்ப் பாய்ச்ச வேண்டும். அனைத்து விதைகளுக்கும் 3ம் நாள் உயிர்த் தண்ணீர் ஊற்ற வேண்டும். முளைப்புத் திறன் வந்தவுடன் வாய்க்கால்களின் மூலம் வாரம் ஒருமுறை நீர்ப் பாய்ச்சி முறையாக பராமரித்தால், கொடிகளில் பெண் பூக்கள் அதிகம் தோன்றி பூசணிக்காய்கள் 90வது நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும். இதேபோல் தக்காளி, மிளகாய், மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை உள்ளிட்டவற்றை வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்து நல்ல மகசூல் பெறலாம்.

 

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி