Thursday, September 19, 2024
Home » பாசனம், குடிநீர், மீன்பிடித் தொழில் என வளங்களை வாரி வழங்கி வரும் ‘வைகை அணை’

பாசனம், குடிநீர், மீன்பிடித் தொழில் என வளங்களை வாரி வழங்கி வரும் ‘வைகை அணை’

by Lakshmipathi

*5 மாவட்ட மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை விவசாயிகளுக்கு பாசன நீராகவும், மக்களுக்கு குடிநீராகவும், சுற்றுலா பயனிகளுக்கு சுற்றுலாத் தலமாகவும், மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலாகவும் என பல்வேறு வகையில் மக்களுக்கு பயன்பெற்று வருகிறது.தேனி மாவட்டத்தில் வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி போன்ற மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் உருவாகும் மழைநீர் வைகை ஆற்றில் வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது.

இந்த வைகை ஆற்றுக்கு குறுக்கே அணை கட்டி அந்த தண்ணீரை சேமித்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆண்டிபட்டி அருகே அணை கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 1959ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்த அணையின் மொத்த உயரம் 111 அடியாககும். 71 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ளலாம். இந்த அணையில் இருந்து வைகை பாசனத்தின் கீழ் 1 லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கர் பரப்பளவில் பாசனம் செய்யப்படுகிறது.

அணையில் இருந்து பெரியார் பாசனத்தின் கீழ் 1 லட்சத்து 50 ஆயிரத்து 43 ஏக்கர் பரப்பளவில் பாசனம் செய்யப்படுகிறது. இதில் 45 ஆயிரத்து 41 ஏக்கர் இருபோக பாசன பபகுதியாகவும், 85 ஆயிரத்து 563 ஏக்கர் ஒருபோக பாசன பகுதியாகவும் , 19 ஆயிரத்து 439 ஏக்கர் திருமங்கலம் பிரதான கால்வாய் பகுதியாகவும், 38 ஆயிரத்து 248 ஏக்கர் விரிவாக்கப்பட்ட பெரியார் பிரதான கால்வாயாகவும் உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் 5 மாவட்ட மக்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தொடர்ந்து பங்களித்து வரும் வகையில் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாகவும் உள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த வைகை அணை பகுதியில் மீன்பிடி தொழிலும் நடந்து வருகிறது.

தென்மாவட்ட மக்கள் விரும்பும் ‘வைகை பூங்கா’வைகை அணை கட்டுவதற்கு ரூ.3 கோடியை 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதில் அணை கட்டி முடித்தது போக மீதம் 40 லட்சம் பணம் இருந்தது. அந்த பணத்தில் அணைப் பகுதியில் பூங்கா கட்டப்பட்டு பொதுமக்கள் சுற்றிபார்க்கும் வகையில் அமைக்கப்பட்டது. தற்போது இந்த பூங்கா தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. பூங்காவிற்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் வீட்டிலிருந்து உணவு சமைத்து குடும்பத்துடன் சுற்றிபார்த்து உண்டு மகிழ்வார்கள். வைகை அணை குடும்பத்துடன் சென்று வருவதற்கும், குழந்தைகள் குஷியாக விளையாடுவதற்கும் ஏற்ற இடமாக உள்ளது. பிரமாண்டமாக எழுந்து நிற்கும் அணையின் இரண்டு புறங்களும் வலதுகரை பூங்கா, இடதுகரை பூங்காக்கள் உள்ளது.

இந்த இரண்டு கரை பூங்காக்களிலும் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் உள்ளது. சிறுவர்கள் மகிழ்ந்து விளையாடுவதற்கு சிறுவர் பூங்கா, பெரியார் மாதிரி வைகை பூங்கா, மச்சக்கன்னி பூங்கா, பயில்வான் பார்க், யானை சறுக்கல், ஊஞ்சல், மலைகள் போல் அமைக்கப்பட்டு வரைபடங்கள், நீரூற்றுகள், புல்தரைகள், ஆங்காங்கே ஓய்விடங்கள், குழந்தைகள் குஷியாக சென்றுவர உல்லாச ரயில், படகு குழாம், இசையுடன் தண்ணீர் நடனமாடும் வகையில் அமைக்கப்பட்டு இசை நடன நீரூற்று என ஏராளமான அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது.

பூங்காவில் இருந்து அப்படியே அணையின் மேல் பகுதிக்கு சென்று விடலாம். அணையின் மேல் பகுதியில் இருந்து தேங்கி இருக்கும் தண்ணீர் பிரமாண்டமாக காட்சியளிக்கும். பிரமாண்டமாக காணப்படும் இந்த தண்ணீரை அருகில் இருக்கும் மலையுடன் சேர்த்து கடல்போல அலையுடன் காணும் காட்சி காண்போரை வியப்பிற்கு கொண்டு செல்லும். இந்த நுழைவு வாயிலில் பூங்காவிற்குள் செல்வதற்கு ஒரு நபருக்கு 5 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. காலை 7 மணிக்கு திறக்கப்படும் பூங்கா இரவு 7 மணி வரை இருக்கும். மாலை நேரத்தில் பூங்கா மற்றும் அணை வண்ண விளக்குகளால் காட்சியளிக்கும்.

வைகை பண்ணையில் மீன்கள் ‘ஜோரு’

வைகை அணை பகுதியில் மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம் அலவலகம் அமைந்துள்ளது. இந்த மீன்வளத்துறை மூலம் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரித்து, மக்களுக்கு மீன் மூலம் கிடைக்கும் புரத சத்தை அதிகரித்து வழங்குவது இந்த துறையின் முக்கிய நோக்கமாக உள்ளது. வைகை அணை மீன்வளத்துறை அலுவலகத்தின் சார்பில் வைகை அணையில் மீன்பிடித் தொழில் நடைபெற்று வந்தது.

இதில் வைகை அணையில் மீன்பிடிக்கும் உரிமையை தனியாருக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. மீன்பிடி உரிமை தனியாருக்கு மாற்றினாலும், தற்போது இருக்கும் மீனவர்கள் மட்டுமே பரிசலில் சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது‌. 5 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வைகை அணையில் மீன்பிடி உரிமம் தனியார் மூலம் நடைபெற்று வருகிறது.

இந்த மீன்பிடி தொழிலில் சுமார் 140 மீனவர்கள் 70 பரிசல்களில் மீன் பிடித்து வருகின்றனர். இங்கு ஒருநாளைக்கு 500 கிலோ முதல் 1 டன் வரை மீன்கள் பிடிக்கப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இயற்கை முறையில் வளரும் வைகை அணை மீன்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு அதிகளவில் பிடிக்கப்படும் ஜிலேபி ரக மீன்களை பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள். மீன்களை ஒரு கிலோ ரூ.120 வீதம் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீன்வளத்துறை அலுவலகத்தில் மீன் பண்ணை செயல்பட்டு வருகிறது.

மணிமுத்தாறு, பவாணி சாகர் அணை உள்ளிட்ட பகுதிகளில் நுண் மீன்குஞ்சுகள் வாங்கப்பட்டு, அதனை மீன் பண்ணையில் உள்ள தொட்டியில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு கொண்டை, ரோகு, கட்லா, மிருகால் போன்ற மீன் ரகங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. கண்மாய் மற்றும் குளங்களில் மீன் வளர்ப்பவர்களுக்கு நுண் மீன் குஞ்சுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீன் பண்ணையில் உள்ள மீன் தொட்டிகளில் நுண் மீன்குஞ்சுகள் 45 நாட்களுக்கு வளர்க்கப்பட்டு, மீன் குஞ்சுகள் வளர்ச்சியடைந்த பிறகு அணைகளிலும், கண்மாய், குளங்களிலும் வளர்ப்புக்காக வழங்ககப்படும். தற்போது வைகை அணை மீன்பண்ணையில் பல லட்சம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

You may also like

Leave a Comment

10 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi