வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ஸ்அப் மூலம் பாலியல் தொழில்: 2 பேர் கைது

சென்னை: வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாட்ஸ்அப் குழு மூலம் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் புரோக்கர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெருநகர காவல் எல்லையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய போலீஸ் கமிஷனர் அருண், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் புரோக்கர்களை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வடபழனி வடக்கு மாட வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார், குறிப்பிட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை செய்தனர். அப்போது, ஒரு வீட்டில் இளம்பெண் ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடப்பது தெரிந்தது.

விசாரணையில், பழைய வண்ணாரப்பேட்டை மன்னப்பன் தெருவை சேர்ந்த பிரபல பாலியல் புரோக்கர் பஷிர் முகமது இம்பராகிம் (61) மற்றும் தி.நகர் பகுதியை சேர்ந்த பெண் புரோக்கர் தேவி (40) ஆகியோர் வாட்ஸ்அப் குழு மூலம் இளம்பெண்கள் புகைப்படத்தை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி, பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து விபசார தடுப்பு பிரிவு போலீசார் 2 புரோக்கர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இளம் பெண் ஒருவர் மீட்கப்பட்டார். மேலும் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள பயன்படுத்திய 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related posts

காவல்துறையினர் எந்த ரக காக்கி உடையை அணிய வேண்டும் என்பது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை

மதுரையில் தீ விபத்து நடந்த கட்டடத்தை இடிக்கும் பணி தொடக்கம்!

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்.. 2017-2021 வரை திருமண திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்?: ஐகோர்ட் கேள்வி!!